1 மக்கபேயர் 11

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
1எகிப்து மன்னன் கடல்மணல்போலப் பெரும் படைகளையும் திரளான கப்பல்படையையும் ஒன்று கூட்டினான்; அலக்சாண்டரின் நாட்டை வஞ்சகமாய்க் கைப்பற்றித் தனது அரசோடு இணைக்க முயன்றான்; 2அமைதியை விரும்புபவன்போலச் சிரியாவுக்குச் சென்றான். நகரங்களின் மக்கள் நகர வாயில்களைத் திறந்து அவனை வரவேற்றார்கள்; தாலமி தன் மாமனாராய் இருந்ததால் அவனை வரவேற்கும்படி அலக்சாண்டர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். 3நகரங்களில் தாலமி நுழைந்தபோது ஒவ்வொரு நகரிலும் காவற்படையை நிறுவினான்.⒫ 4அவன் அசோத்தை நெருங்கியபோது தீக்கிரையாக்கப்பட்ட தாகோன் கோவிலையும் தலைமட்டமாக்கப்பட்ட அசோத்து நகரையும் அதன் புறநகர்ப்பகுதிகளையும் சிதறிக்கிடந்த பிணங்களையும் போரில் யோனத்தான் தீயிட்டுக் கரியாக்கிய பிணங்களையும் மக்கள் அவனுக்குக் காட்டினார்கள்; ஏனென்றால் அவன் சென்ற வழியில்தான் அவை குவிக்கப்பட்டிருந்தன. 5யோனத்தான் மீது பழி சுமத்தும் பொருட்டு அவர் செய்திருந்ததை மக்கள் மன்னனுக்கு எடுத்துரைத்தார்கள்; ஆனால் மன்னன் பேசாதிருந்தான். 6மன்னனை யாப்பாவில் அரச மரியாதையுடன் யோனத்தான் சந்தித்தார். அவர்கள் ஒருவர் ஒருவரை வாழ்த்திக்கொண்டார்கள்; அன்று இரவு அங்குத் தங்கினார்கள். 7மன்னனோடு புறப்பட்டு எலூத்தர் ஆறுவரை யோனத்தான் சென்றார்; பிறகு எருசலேம் திரும்பினார்.⒫ 8தாலமி மன்னன் செலூக்கியா வரை இருந்த கடலோர நகரங்களை அடிமைப்படுத்தினான்; அலக்சாண்டருக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்துவந்தான்.⒫ 9தெமேத்திரி மன்னனிடம் தாலமி தூதர்களை அனுப்பி, “வாரும், ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொள்வோம். அலக்சாண்டரோடு வாழும் என் மகளை உமக்குக் கொடுப்பேன். நீர் உம் மூதாதையரின் அரசின்மீது ஆட்சிசெலுத்துவீர். 10அலக்சாண்டருக்கு என் மகளைக் கொடுத்ததன் பொருட்டு வருந்துகிறேன்; ஏனெனில்என்னை அவன் கொல்ல வழி தேடினான்” என்று கூறினான். 11அலக்சாண்டரின் நாட்டைக் கைப்பற்றத் தாலமி விரும்பியமையால், இவ்வாறு அவன்மீது பழி சுமத்தினான். 12தன் மகளை அவனிடமிருந்து பிரித்துத் தெமேத்திரிக்குக் கொடுத்தான்; அலக்சாண்டரோடு கொண்டிருந்த நட்பை முறித்துக் கொண்டான். அவர்களின் பகை வெளிப்படையாயிற்று. 13பிறகு தாலமி அந்தியோக்கி நகருக்குச் சென்று ஆசியாவின் மணிமுடியைச் சூடிக்கொண்டான்; இவ்வாறு எகிப்து, ஆசியா நாடுகளின் இரு மணிமுடிகளையும் தன் தலையில் அணிந்து கொண்டான்.⒫ 14அப்பொழுது அலக்சாண்டர் மன்னன் சிலிசியாவில் இருந்தான்; ஏனென்றால் அப்பகுதி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 15அலக்சாண்டர் இதைக் கேள்விப்பட்டுத் தாலமியை எதிர்த்துப் போரிடச் சென்றான். தாலமியும் அணிவகுத்துச் சென்று வலிமை வாய்ந்த படையோடு அவனை எதிர்த்து விரட்டியடித்தான். 16புகலிடம் தேடி அலக்சாண்டர் அரேபியாவுக்கு ஓடினான். தாலமி மன்னனின் புகழ் உயர்ந்தோங்கியது. 17சப்தியேல் என்ற அரேபியன் அலக்சாண்டருடைய தலையைக் கொய்து தாலமிக்கு அனுப்பி வைத்தான். 18மூன்று நாளுக்குப் பிறகு தாலமி மன்னனும் இறந்தான். கோட்டைக்குள் இருந்த அவனுடைய வீரர்கள் கோட்டைவாழ் மக்களால் கொல்லப்பட்டார்கள். 19எனவே நூற்று அறுபத்தேழாம் ஆண்டு* தெமேத்திரி அரியணை ஏறினான். 20அக்காலத்தில் யோனத்தான் எருசலேமில் இருந்த கோட்டையைத் தாக்குவதற்கு யூதேயாவில் இருந்தவர்களைத் திரட்டினார்; அதற்கு எதிராகப் பயன்படுத்தப் படைப் பொறிகளையும் செய்தார். 21நெறிகெட்டவர்களும் தங்கள் இனத்தாரையே பகைத்தவர்களுமான சில மனிதர்கள் தெமேத்திரி மன்னனிடம் சென்று, கோட்டையை யோனத்தான் முற்றுகையிட்டிருப்பதாக அறிவித்தார்கள். 22அவன் இதைக் கேட்டுச் சினங்கொண்டான். உடனே புறப்பட்டுத் தாலமாய் நகருக்குச் சென்றான்; யோனத்தான் கோட்டையைத் தொடர்ந்து முற்றுகையிடுவதை விடுத்து, விரைவில் தாலமாய்க்கு வந்து தன்னைச் சந்தித்துப் பேசும்படி அவருக்கு எழுதினான்.⒫ 23இதை அறிந்த யோனத்தான், கோட்டையைத் தொடர்ந்து முற்றுகையிடுமாறு கட்டளையிட்டார்; இஸ்ரயேலின் மூப்பர்கள் சிலரையும் குருக்கள் சிலரையும் தேர்ந்துகொண்டார்; தம் உயிரையே பணயம் வைத்து, 24பொன், வெள்ளி, ஆடைகள், இன்னும் பல அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தாலமாயில் இருந்த தெமேத்திரி மன்னிடம் சென்றார்; அவனது நல்லெண்ணத்தைப் பெற்றார். 25அவருடைய இனத்தாருள் நெறிகெட்டவர்கள் சிலர் அவர்மீது குற்றம் சாட்டிய வண்ணம் இருந்தனர். 26எனினும் மன்னன் தனக்கு முன்னிருந்தவர்கள் செய்தவண்ணம் யோனத்தானுக்குச் செய்து தன் நண்பர்கள் அனைவர் முன்பாகவும் அவரை மேன்மைப்படுத்தினான். 27தலைமைக் குருபீடத்தையும் முன்பு அவர் பெற்றிருந்த மற்றப் பெருமைகளையும் அவருக்கு உறுதிப்படுத்தி அவரைத் தன் முக்கிய நண்பர்களுள் ஒருவராகக் கொண்டான்.⒫ 28யூதேயாவையும் சமாரியாவின் மூன்று மாநிலங்களையும் வரி செலுத்துவதினின்று விலக்கும்படி மன்னனை யோனத்தான் கேட்டுக்கொண்டார்; அதற்குப் பதிலாக பன்னிரண்டு டன்* வெள்ளி கொடுப்பதாக உறுதியளித்தார். 29மன்னன் அதற்கு இசைந்து, அவையெல்லாவற்றையும் உறுதிப்படுத்தி யோனத்தானுக்கு எழுதிய மடல் பின்வருமாறு:⒫ 30⦃“தெமேத்திரி மன்னர் தம் சகோதரரான யோனத்தானுக்கும் யூத இனத்தாருக்கும் வாழ்த்துக் கூறி எழுதுவது:⦄⒫ 31⦃உங்களைப்பற்றி எம் உறவினர் இலாஸ்தேனுக்கு நாம் எழுதிய மடலின் நகல் ஒன்றை உங்களுக்கு வைக்கிறோம். இதனால் அதில் உள்ளதை நீங்களும் அறிந்து கொள்ளலாம்.⦄⒫ 32⦃‘தெமேத்திரி மன்னர் தம் தந்தை இலாஸ்தேனுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது: 33எம் நண்பர்களும் எம்பால் தாங்கள் கொண்டுள்ள கடமைகளை நிறைவேற்றுகிறவர்களுமான யூத இனத்தார் எம்மட்டில் நல்லெண்ணம் கொண்டுள்ளதால் அவர்களுக்கு நன்மை செய்ய நாம் முடிவு செய்துள்ளோம். 34ஆதலால் யூதேயா நாடு முழுவதும் சமாரியாவினின்று பிரித்து யூதேயாவில் இணைத்த அபைரமா, லிதா, இரதாமின் ஆகிய மூன்று மாநிலங்களும் அவற்றைச் சேர்ந்த அனைத்தும் அவர்களுக்குச் சொந்தம் என உறுதிப்படுத்துகிறோம். முன்பு மன்னர் ஆண்டுதோறும் தண்டிவந்த வரிகளிலிருந்து — அதாவது, நிலத்தின் விளைச்சல், மரங்களின் கனிகள் ஆகியவற்றுக்கான வரிகளிலிருந்து, எருசலேமில் பலியிடுவோருக்கு விலைக்கு வழங்குகிறோம். 35எமக்குச் சேரவேண்டிய பத்திலொரு பங்கு, உப்புவரி, அரசருக்குரிய சிறப்பு வரி, மற்ற வரிகள் ஆகிய அனைத்திலுமிருந்தும் இதுமுதல் விலக்கு வழங்குகிறோம். 36வழங்கப்பட்ட வரிச் சலுகைகளில் ஒன்றுகூட இன்றுமுதல் என்றும் திரும்பப் பெறப்படமாட்டாது.⦄⒫ 37⦃ஆகவே இப்போது இந்த மடலின் நகல் ஒன்றை எடுத்து யோனத்தானுக்குக் கொடுத்துத் திருமலையில் அனைவரும் காணக்கூடிய இடத்தில் அதை வைக்கச் செய்யும்’.”⦄ 38தன் ஆட்சியில் நாடு அமைதியாக இருப்பதையும் எவரும் தன்னை எதிர்க்காதிருப்பதையும் தெமேத்திரி மன்னன் கண்டு, பிற இனத்தாரின் தீவுகளிலிருந்து தான் திரட்டியிருந்த அன்னியப் படைகளைத்தவிரத் தன் படைவீரர் அனைவரையும் அவரவர் இடத்துக்கு அனுப்பினான். இவ்வாறு செய்ததால் அவனுக்கு முன்னிருந்தவர்களுடைய படைகள் யாவும் அவனைப் பகைத்தன. 39முன்னர் அலக்சாண்டரின் ஆதரவாளர்களுள் ஒருவனான திரிபோ, படைகள் அனைத்தும் தெமேத்திரி மீது முறையிடுவதைக் கண்டான். அலக்சாண்டரின் இளையமகன் அந்தியோக்கை வளர்த்துவந்த அரேபியனான இமால்குவிடம் சென்றான்; 40அந்தியோக்கு தன் தந்தைக்குப் பதிலாய் ஆட்சி செய்வதற்கு அவனைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி இமால்குலைத் திரிபோ வருந்திக்கேட்டுக் கொண்டான்; தெமேத்திரி செய்த யாவற்றையும் படைகள் அவன்மீது கொண்டிருந்த வெறுப்பையும் எடுத்துக்கூறினான்; பல நாள் அவ்விடத்தில் தங்கியிருந்தான்.⒫ 41எருசலேம் கோட்டையிலும் மற்ற அரண்காப்புகளிலும் இருந்த வீரர்கள் இஸ்ரயேலுக்கு எதிராய்ப் போர் புரிந்தவண்ணம் இருந்ததால், அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்படி தெமேத்திரி மன்னனைக் கேட்டுக் கொள்ள யோனத்தான் ஆளனுப்பினார். 42தெமேத்திரி யோனத்தானுக்கு அனுப்பிவைத்த செய்தி பின்வருமாறு: “உமக்கும் உம் இனத்தாருக்கும் நான் இதை மட்டும் செய்யப் போவதில்லை; வாய்ப்புக் கிடைக்கும்போது உம்மையும் உம் இனத்தாரையும் மிகவும் பெருமைப்படுத்துவேன். 43இப்போது என் படைகள் யாவும் கிளர்ச்சி செய்துவருவதால் எனக்காகப் போரிட ஆள்களை அனுப்புமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன்.”⒫ 44ஆகவே யோனத்தான் வலிமை வாய்ந்த படைவீரர்கள் மூவாயிரம் பேரை அந்தியோக்கி நகருக்கு அனுப்பினார். அவர்கள் மன்னனிடம் சேர்த்ததும் அவர்களின் வரவால் அவன் மகிழ்ச்சி கொண்டான். 45ஏனெனில் நகர மக்களுள் ஓர் இலட்சத்து இருபதாயிரம் பேர் நகரின் நடுவில் ஒன்றுகூடி, மன்னனைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர். 46ஆனால் மன்னன் அரண்மனைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். நகரில் இருந்தவர்கள் முக்கிய தெருக்களைக் கைப்பற்றிப் போர்தொடுத்தார்கள். 47ஆகவே மன்னன் யூதர்களைத் தன் உதவிக்கு அழைத்தான். உடனே அவர்கள் அனைவரும் அணிதிரண்டு அவனிடம் சென்றார்கள்; பிறகு நகரெங்கும் பிரிந்து சென்று அன்று ஏறத்தாழ ஓர் இலட்சம் பேரைக் கொன்றார்கள்; 48நகரைத் தீக்கிரையாக்கி அன்று ஏராளமான கொள்ளைப் பொருள்களை எடுத்துக் கொண்டார்கள்; இவ்வாறு மன்னனைக் காப்பாற்றினார்கள். 49யூதர்கள் தாங்கள் திட்டமிட்டபடி நகரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள் என்று நகரில் இருந்தவர்கள் கண்டார்கள்; இதனால் துணிவு இழந்து மன்னனிடம் சென்று கதறி மன்றாடினார்கள்; 50“எங்களுக்கு அமைதி தாரும்; எங்களுக்கும் நகருக்கும் எதிராகப் போரிடும் யூதர்களைத் தடுத்து நிறுத்தும்” என்று வேண்டினார்கள்; 51தங்கள் படைக்கலங்களை எறிந்துவிட்டுச் சமாதானம் செய்து கொண்டார்கள். இவ்வாறு யூதர்கள் மன்னன் முன்பும் அவனது நாட்டு மக்கள் அனைவர் முன்பும் பெருமை பெற்றுத் திரளான கொள்ளைப் பொருள்களோடு எருசலேம் திரும்பினார்கள்.⒫ 52தெமேத்திரி மன்னனுடைய அரசு நிலைபெற்றது; அவனது ஆட்சியில் நாடு அமைதியாய் இருந்தது. 53பின்னர் அவன் தன் உறுதிமொழிகளையெல்லாம் மீறி, யோனத்தானோடு கொண்டிருந்த நட்புறவை முறித்துக் கொண்டான்; அவரிடமிருந்து பெற்றிருந்த நன்மைகளுக்கு நன்றி காட்டாமல் அவருக்குப் பெரிதும் தொல்லை கொடுத்துவந்தான். 54இதன்பிறகு சிறுவன் அந்தியோக்குடன் திரிபோ திரும்பிவந்தான். அந்தியோக்கு முடிபுனைந்து அரசாளத் தொடங்கினான். 55தெமேத்திரி திருப்பி அனுப்பியிருந்த படைகளெல்லாம் அந்தியோக்குடன் சேர்ந்து கொண்டு தெமேத்திரியை எதிர்க்கவே அவன் முறியடிக்கப்பட்டு ஓடினான். 56திரிபோ யானைகளைப் பிடித்து அந்தியோக்கி நகரைக் கைப்பற்றினான். 57பின்னர் சிறுவன் அந்தியோக்கு, “நீர் தலைமைக் குருவாய்த் தொடர்ந்து இருப்பீர் என உறுதிப்படுத்துகிறேன்; நான்கு மாநிலங்களுக்கு ஆளுநராக உம்மை ஏற்படுத்துகிறேன்; மன்னரின் நண்பர்களுள் ஒருவராகவும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று யோனத்தானுக்கு எழுதியனுப்பினான். 58பொன் தட்டுகளையும் உணவுகலன்களையும் அவருக்கு அனுப்பி வைத்தான்; பொற் கிண்ணத்தில் அருந்தவும் அரச ஆடை உடுத்திக் கொள்ளவும் பொன் அணியூக்கு அணிந்துகொள்ளவும் அதிகாரம் அளித்தான்; 59அவருடைய சகோதரரான சீமோனைத் தீரின் எல்லையில் இருந்த கணவாயிலிருந்து எகிப்தின் எல்லை வரை இருந்த பகுதிக்கு ஆளுநராக ஏற்படுத்தினான்.⒫ 60யோனத்தான் புறப்பட்டு யூப்பிரத்தீசு ஆற்றுக்கு மேற்கே இருந்த நகரங்களுக்குச் சென்றார். சிரியாவின் படைகள் யாவும் அவரோடு கூட்டுச் சேர்ந்துகொண்டன. அவர் அஸ்கலோன் நகர் சேர்ந்ததும் நகரில் இருந்தோர் பெரும் சிறப்போடு அவரை வரவேற்றனர். 61அவர் அவ்விடமிருந்து காசாவுக்குச் சென்றார். காசாவில் இருந்தவர்கள் வாயில்களை அடைத்து அவரை உள்ளே விடவில்லை. எனவே அவர் அதை முற்றுகையிட்டுப் புறநகர்ப் பகுதிகளைக் கொள்ளையடித்துத் தீக்கிரையாக்கினார். 62காசா நகரத்தார் யோனத்தானை வேண்டிக் கொள்ளவே அவரும் அவர்களோடு சமாதானம் செய்து, அவர்களுடைய தலைவர்களின் மைந்தர்களைப் பிணைக்கைதிகளாக எருசலேமுக்கு அனுப்பினார்; நாட்டின் வழியாகச் சென்று தமஸ்கு நகரை அடைந்தார்.⒫ 63தெமேத்திரியின் படைத்தலைவர்கள் தம்மைப் பதவியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுக் கலிலேயாவின் காதேசு நகருக்குப் பெரும் படையோடு வந்திருப்பதாக யோனத்தான் கேள்வியுற்றார்; 64ஆகையால் அவர்களை எதிர்த்துச் சென்றார்; தம் உடன்பிறப்பான சீமோனை யூதேயாவிலேயே விட்டுச் சென்றார். 65சீமோன் பெத்சூரை முற்றுகையிட்டுப் பல நாள் அதை எதிர்த்துப் போரிட்டார்; நகரைச் சூழ்ந்து வளைத்துக்கொண்டார். 66அவர்கள் தங்களோடு சமாதானம் செய்து கொள்ளும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அவரும் இசைந்தார். அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி நகரையும் பிடித்து அங்கு ஒரு காவற்படையை நிறுவினார்.⒫ 67இதற்கிடையில் யோனத்தான் தம் படைகளோடு கெனசரேத்து ஏரி அருகே பாசறை அமைத்திருந்தார். மறுநாள் பொழுது விடியுமுன் அவர்கள் காட்சோர் சமவெளிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். 68அயல்நாட்டுப் படையினர் சமவெளியில் அவரை எதிர்கொண்டு நேருக்கு நேர் தாக்கினார்கள்; அவரைத் தாக்குவதற்காகப் பதுங்கிப் பாயும் படை ஒன்றை மலைகளில் விட்டுவைத்திருந்தார்கள். 69பதுங்கியிருந்தவர்கள் தங்கள் இடங்களிலிருந்து எழுந்துவந்து போரில் கலந்து கொண்டார்கள். 70யோனத்தானுடன் இருந்தவர்கள் எல்லாரும் ஓடிப்போனார்கள். அப்சலோமின் மகன் மத்தத்தியா, கால்பியின் மகன் யூதா ஆகிய படைத்தலைவர்களைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை. 71யோனத்தான் தம் ஆடைகளைத் கிழித்துக்கொண்டு மண்ணைத் தம் தலைமேல் தூவிக்கொண்டு இறைவனை வேண்டினார். 72பிறகு அவர் போரிடத் திரும்பிச் சென்று எதிரிகளை முறியடித்ததும், அவர்கள் தப்பியோடினார்கள். 73யோனத்தானிடமிருந்து ஓடினவர்கள் இதைக் கண்டு திரும்பி வந்து அவரோடு சேர்ந்து கொண்டார்கள்; காதேசில் இருந்து எதிரிகளின் பாசறை வரை அவர்களைத் துரத்திச் சென்று அவ்விடம் பாசறை அமைத்தார்கள். 74அன்று அயல்நாட்டு வீரர்களுள் மூவாயிரம் பேர் மடிந்தனர். பிறகு யோனத்தான் எருசலேம் திரும்பினார்.