1⁽யூதாவையும் எருசலேமையும் குறித்து␢ ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட␢ காட்சி:⁾
2⁽இறுதி நாள்களில் ஆண்டவரின்␢ கோவில் அமைந்துள்ள மலை␢ எல்லா மலைகளுக்குள்ளும்␢ உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்;␢ எல்லாக் குன்றுகளுக்குள்ளும்␢ மேலாய் உயர்த்தப்படும்;␢ மக்களினங்கள் அதைநோக்கிச்␢ சாரை சாரையாய் வருவார்கள்.⁾
3⁽வேற்றினத்தார் பலர்␢ அங்கு வந்து சேர்ந்து␢ ‘புறப்படுங்கள்␢ ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;␢ யாக்கோபின் கடவுளின்␢ கோவிலுக்குப் போவோம்.␢ அவர் தம் வழிகளை␢ நமக்குக் கற்பிப்பார்;␢ நாமும் அவர் நெறிகளில்␢ நடப்போம்’ என்பார்கள்.␢ ஏனெனில், சீயோனிலிருந்தே␢ திருச்சட்டம் வெளிவரும்;␢ எருசலேமிலிருந்தே␢ ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.⁾
4⁽அவர் வேற்றினத்தாரிடையே உள்ள␢ வழக்குகளைத் தீர்த்து வைப்பார்;␢ பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்;␢ அவர்கள் தங்கள் வாள்களைக்␢ கலப்பைக் கொழுக்களாகவும்␢ தங்கள் ஈட்டிகளைக்␢ கருக்கரிவாள்களாகவும்␢ அடித்துக் கொள்வார்கள்,␢ ஓர் இனத்திற்கு எதிராக␢ மற்றோர் இனம் வாள் எடுக்காது;␢ அவர்கள் இனி ஒருபோதும்␢ போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.⁾
5⁽யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள்␢ நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;⁾
6⁽யாக்கோபின் குடும்பத்தாராகிய␢ உம்முடைய மக்களை␢ நீர் கைவிட்டு விட்டீர்;␢ ஏனெனில் கீழை நாட்டுப் போதனை␢ அவர்களிடையே மிகுந்துள்ளது.␢ பெலிஸ்தியரைப் போல அவர்கள்␢ நிமித்தம் பார்க்கின்றார்கள்;␢ வேற்று நாட்டினருடன்␢ கூட்டுச் சேர்கின்றார்கள்.⁾
7⁽அவர்கள் நாடு வெள்ளி,␢ பொன்னால் நிறைந்துள்ளது;␢ அவர்கள் கருவூலத்திற்கு␢ அளவே இல்லை;␢ அவர்கள் நாடு␢ குதிரைகளால் நிறைந்துள்ளது;␢ அவர்கள் தேர்ப்படைகள்␢ எண்ணிக்கையில் அடங்கா.⁾
8⁽அவர்கள் நாட்டில்␢ சிலைகள் மலிந்துள்ளன;␢ தங்கள் கைவேலைப்பாட்டினால்␢ செய்தவற்றை வணங்குகின்றனர்;␢ தங்கள் விரல்கள்␢ உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.⁾
9⁽இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்;␢ மக்கள் சிறுமை அடைவார்கள்;␢ ஆண்டவரே! அவர்களுக்கு␢ மன்னிப்பு அருளாதீர்;⁾
10⁽கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்;␢ மண்ணில் பதுங்கி␢ மறைந்து கொள்ளுங்கள்;␢ ஆண்டவரின் அச்சம் தரும்␢ திருமுன்னின்றும் அவரது␢ உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்;⁾
11⁽செருக்குமிகு பார்வையுடையோர்␢ தாழ்த்தப்படுவர்;␢ ஆணவமிக்கோர் அவமானமடைவர்;␢ ஆண்டவர் ஒருவரே␢ அந்நாளில் மாட்சியுறுவார்.⁾
12⁽படைகளின் ஆண்டவருக்குரிய␢ நாள் ஒன்று இருக்கின்றது;␢ அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய␢ அனைவரும் தாழ்வுறுவர்;␢ உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை␢ அனைத்தும் நலிவடையும்.⁾
13⁽அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த␢ கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும்␢ பாசானில் உள்ள அனைத்துக்␢ கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.⁾
14⁽வானளாவிய மலைகள்,␢ உயர்ந்த குன்றுகள்␢ அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.⁾
15⁽உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும்␢ தகர்த்தெறியப்படும்;␢ வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும்␢ தவிடு பொடியாக்கப்படும்.⁾
16⁽தர்சீசின் மரக்கலங்கள் யாவும்␢ அழகிய வேலைப்பாடுகள்␢ அனைத்தும் அமிழ்த்தப்படும்.⁾
17⁽மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்;␢ அவர்தம் செருக்கு அகற்றப்படும்;␢ ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில்␢ உன்னதமானவராயிருப்பார்;⁾
18⁽சிலைகள் அனைத்தும்␢ ஒருங்கே ஒழிக்கப்படும்.⁾
19⁽ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய␢ வரும்போது,␢ அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும்,␢ அவரது சீர்மிகு மாட்சியினின்றும்␢ மறைந்திட மனிதர்␢ குன்றின் குகைகளில்␢ புகுந்து கொள்வர்;␢ மண்ணின் குழிகளில்␢ மறைந்து கொள்வர்.⁾
20⁽அந்நாளில் மக்களினத்தார்␢ தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய␢ வெள்ளிச் சிலைகளையும்,␢ பொற்பதுமைகளையும்,␢ அகழ் எலிகளுக்கும்,␢ வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.⁾
21⁽ஆண்டவர் உலகை␢ நடுநடுங்கச் செய்ய வரும்போது,␢ அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும்,␢ அவரது சீர்மிகு மாட்சியினின்றும்␢ மறைந்திட அவர்கள்␢ பாறைகளின் வெடிப்புகளில்␢ பதுங்கிக் கொள்வர்;␢ குன்றுகளின் பிளவுகளில்␢ ஒளிந்து கொள்வர்.⁾
22⁽நிலையற்ற மனிதர்மேல்␢ நம்பிக்கை வைக்காதீர்;␢ அவர்களின் உயிர் நிலையற்றது;␢ ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு␢ அவர்களின் தகுதி என்ன?⁾