எண்ணிக்கை 1

முந்திய அடுத்த
1இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது: 2இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள். 3இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள். 4ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்; அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும். 5உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன; ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்; இவன் செதேயூர் மகன்; 6சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்; இவன் சுரிசத்தாய் மகன்; 7யூதா குலத்திலிருந்து நகுசோன்; இவன் அம்மினதாபின் மகன்; 8இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்; இவன் சூவார் மகன்; 9செபுலோன் குலத்திலிருந்து எலியாபு; இவன் கேலோன் மகன்; 10யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன்; மனாசே குலத்திலிருந்து கமாலியேல்; இவன் பெதாசூரின் மகன்; 11பென்யமின் குலத்திலிருந்து அபிதான்; இவன் கிதயோனின் மகன்; 12தாண் குலத்திலிருந்து அகியசேர்; இவன் அம்மிசத்தாயின் மகன்; 13ஆசேர் குலத்திலிருந்து பகியேல்; இவன் ஒக்ரானின் மகன்; 14காத்து குலத்திலிருந்து எல்யாசாபு; இவன் தெகுவேலின் மகன்; 15நப்தலி குலத்திலிருந்து அகிரா; இவன் ஏனானின் மகன்; 16மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர்.⒫ 17பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். 18இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர். அவர்கள் தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர்.⒫ 19ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே; அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார்.⒫ 20இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்; 21ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.⒫ 22சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்; 23சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர்.⒫ 24காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 25காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.⒫ 26யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 27யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர்.⒫ 28இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 29இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர்.⒫ 30செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 31செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்.⒫ 32யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 33எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர்.⒫ 34மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 35மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.⒫ 36பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 37பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானூறு பேர்.⒫ 38தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 39தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர்.⒫ 40ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 41ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர்.⒫ 42நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 43நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.⒫ 44மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே. 45ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை; 46மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர்.⒫ 47ஆனால், இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை. 48ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: 49“லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்; இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்; 50லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து; அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்; அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள். 51புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்; கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர். வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான். 52இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர். 53லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்; உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே. 54இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.