நீதிமொழிகள் 19

முந்திய அடுத்த
1⁽முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.⁾ 2⁽எண்ணிப் பாராமல் செயலில் இறங்கு வதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.⁾ 3⁽மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்; ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.⁾ 4⁽பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்; ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.⁾ 5⁽பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.⁾ 6⁽வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்; நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.⁾ 7⁽வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்; அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.⁾ 8⁽ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்; மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.⁾ 9⁽பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.⁾ 10⁽அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல; மேலானோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.⁾ 11⁽விவேகமுடையோர் எளிதில் சினமடையார்; குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.⁾ 12⁽அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது; அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.⁾ 13⁽மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்; மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.⁾ 14⁽வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.⁾ 15⁽சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்.⁾ 16⁽திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்; ஆண்ட வருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.⁾ 17⁽ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து விடுவார்.⁾ 18⁽மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.⁾ 19⁽கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.⁾ 20⁽அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.⁾ 21⁽மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.⁾ 22⁽நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையா யிருப்பதே மேல்.⁾ 23⁽ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.⁾ 24⁽சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.⁾ 25⁽ஏளனம் செய்வோரை அடி; அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவரைக் கடிந்துகொள், அவர் மேலும் அறிவுடையவராவார்.⁾ 26⁽தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.⁾ 27⁽பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே; நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் புறக்கணிக்கிறவன் ஆவாய்.⁾ 28⁽தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.⁾ 29⁽இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக் கிறது; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத் திருக்கிறது.⁾