நீதிமொழிகள் 10

முந்திய அடுத்த
1⁽சாலமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.⁾ 2⁽தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.⁾ 3⁽நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்.⁾ 4⁽வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்; விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.⁾ 5⁽கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்; அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.⁾ 6⁽நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.⁾ 7⁽நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்.⁾ 8⁽ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.⁾ 9⁽நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்; கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.⁾ 10⁽தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.⁾ 11⁽நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.⁾ 12⁽பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.⁾ 13⁽விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்; மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.⁾ 14⁽ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்; மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.⁾ 15⁽செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்; ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.⁾ 16⁽நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்; பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.⁾ 17⁽நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்; கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.⁾ 18⁽உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யர்; வசைமொழி கூறுவோர் மடையர்.⁾ 19⁽மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.⁾ 20⁽நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்; பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.⁾ 21⁽நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்; செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.⁾ 22⁽ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்; அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.⁾ 23⁽தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.⁾ 24⁽பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.⁾ 25⁽சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்; கடவுளுக்கு அஞ்சி நடப்ப வர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.⁾ 26⁽பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.⁾ 27⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.⁾ 28⁽நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.⁾ 29⁽ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.⁾ 30⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது; பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.⁾ 31⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்; வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.⁾ 32⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்; பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.⁾