1⁽ஆண்டவரது சினத்தின் கோலால்␢ வேதனை அனுபவித்த ஒருவன் நான்!⁾
2⁽அவர் என்னைத் துரத்தியடித்து,␢ ஒளியினுள் அன்று,␢ இருளினுள் நடக்கச் செய்தார்!⁾
3⁽உண்மையில் அவர் என்மீது␢ தம் கையை ஓங்குகிறார்!␢ நாள் முழுதும் ஓங்குகிறார்!␢ மீண்டும் மீண்டும்␢ என்னை வதைக்கிறார்!⁾
4⁽அவர் என் சதையையும் தோலையும்␢ சிதைத்துவிட்டார்!␢ என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!⁾
5⁽அவர் கசப்பாலும் துயராலும்␢ என்னை முற்றுகையிட்டு␢ வளைத்துக்கொண்டார்!⁾
6⁽பண்டைக் காலத்தில் இறந்தோர் போல,␢ இருள் சூழ்ந்த இடத்தில்␢ அவர் என்னை வாழச் செய்தார்!⁾
7⁽நான் தப்பிச் செல்ல இயலாதவாறு␢ என்னைச் சுற்றிலும்␢ அவர் மதில் எழுப்பினார்!␢ பளுவான தளைகளால்␢ என்னைக் கட்டினார்!⁾
8⁽துணை வேண்டி␢ நான் கூக்குரல் எழுப்பியபோதும்,␢ அவர் என் மன்றாட்டைக் கேட்க␢ மறுத்துவிட்டார்!⁾
9⁽செதுக்கிய கற்களால் என் வழிகளில்␢ தடைச் சுவர் எழுப்பினார்!␢ என் பாதைகளைக்␢ கோணாலாக்கினார்!⁾
10⁽பதுங்கியிருக்கும் கரடி போன்றும்␢ மறைந்திருக்கும் சிங்கம் போன்றும்,␢ அவர் எனக்கு ஆனார்!⁾
11⁽என் வழிகளினின்று␢ இழுத்துச் சென்று,␢ என்னைப் பீறிக் கிழித்தார்!␢ என்னை முற்றிலும் பாழாக்கினார்!⁾
12⁽அவர் தமது வில்லை நாணேற்றினார்!␢ அவர் தமது அம்புக்கு␢ என்னை இலக்கு ஆக்கினார்!⁾
13⁽அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை␢ என் நெஞ்சுள் பாய்ச்சினார்!⁾
14⁽நாள் முழுதும் நான்␢ என் மக்கள் அனைவரின்␢ நகைப்புக்கு உள்ளானேன்!␢ அவர்களது வசைப்பாடலின்␢ பொருள் ஆனேன்!⁾
15⁽அவர் கசப்புணவால்␢ என்னை நிரப்பினார்!␢ எட்டிக் காடியால்␢ எனக்கு வெறியூட்டினார்!⁾
16⁽கற்களால் என் பற்களை␢ நொறுக்கினார்!␢ என்னைப் புழுதியில் போட்டு␢ அவர் மிதித்தார்!⁾
17⁽அமைதியை நான் இழக்கச் செய்தீர்!␢ நலமென்பதையே␢ நான் மறந்துவிட்டேன்!⁾
18⁽‘என் வலிமையும் ஆண்டவர்மீது␢ நான் கொண்டிருந்த நம்பிக்கையும்␢ மறைந்துபோயின!’ என்று␢ நான் சொல்லிக் கொண்டேன்.⁾
19⁽என் துயரத்தையும் அலைச்சலையும்,␢ எட்டிக் காடியையும் கசப்பையும்␢ நினைத்தருளும்!⁾
20⁽அதை நினைந்து நினைந்து␢ என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!⁾
21⁽இதை என் நினைவுக்குக்␢ கொண்டு வருகின்றேன்; எனவே␢ நான் நம்பிக்கை கொள்கின்றேன்.⁾
22⁽‘ஆண்டவரின் பேரன்பு␢ முடிவுறவில்லை!␢ அவரது இரக்கம்␢ தீர்ந்துபோகவில்லை!⁾
23⁽காலைதோறும் அவை␢ புதுப்பிக்கப்படுகின்றன!␢ நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’⁾
24⁽‘ஆண்டவரே என் பங்கு’ என்று␢ என் மனம் சொல்கின்றது!␢ எனவே, நான் அவரில்␢ நம்பிக்கை கொள்கின்றேன்.⁾
25⁽ஆண்டவரில்␢ நம்பிக்கை வைப்போர்க்கும்,␢ அவரைத் தேடுவோர்க்கும்␢ அவர் நல்லவர்!⁾
26⁽ஆண்டவர் அருளும் மீட்புக்காக␢ அமைதியுடன் காத்திருப்பதே நலம்!⁾
27⁽இளமையில் நுகம் சுமப்பது␢ மனிதருக்கு நலமானது!⁾
28⁽அவரே அதை␢ அவர்கள்மேல் வைத்தார்;␢ எனவே, தனிமையில்␢ அமைதியாய் அவர்கள் அமரட்டும்.⁾
29⁽அவர்களின் வாய்␢ புழுதியைக் கவ்வட்டும்;␢ நம்பிக்கைக்கு இன்னும்␢ இடம் இருக்கலாம்!⁾
30⁽தங்களை அறைபவர்களுக்குக்␢ கன்னத்தைக் காட்டட்டும்!␢ அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!⁾
31⁽என் தலைவர் என்றுமே␢ கைவிட மாட்டார்!⁾
32⁽அவர் வருத்தினாலும்,␢ தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.⁾
33⁽மனமார அவர்␢ மானிடரை வருத்துவதுமில்லை;␢ துன்புறுத்துவதுமில்லை.⁾
34⁽நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும்␢ காலால் மிதிக்கப்படுவதையோ,⁾
35⁽உன்னதரின் திருமுன் மனிதருக்கு␢ நீதி மறுக்கப்படுவதையோ,⁾
36⁽வழக்கில் ஒருவர்␢ வஞ்சிக்கப்படுவதையோ,␢ என் தலைவர் காணாது இருப்பாரோ?⁾
37⁽என் தலைவர் கட்டளையிடாமல்,␢ யார் தாம் சொல்லியதை␢ நிறைவேற்றக்கூடும்?⁾
38⁽நன்மையும் தீமையும் புறப்படுவது,␢ உன்னதரின் வாயினின்று அன்றோ?⁾
39⁽உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்?␢ மானிடர் அடைவது␢ தம் பாவத்தின் விளைவை அன்றோ?⁾
40⁽நம் வழிகளை ஆய்ந்தறிவோம்!␢ ஆண்டவரிடம் திரும்புவோம்!⁾
41⁽விண்ணக இறைவனை நோக்கி␢ நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!⁾
42⁽நாங்கள் குற்றம் புரிந்து␢ கலகம் செய்தோம்!␢ நீரோ எம்மை மன்னிக்கவில்லை!⁾
43⁽நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு␢ எம்மைப் பின்தொடர்ந்தீர்!␢ இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?⁾
44⁽எங்கள் மன்றாட்டு␢ உம்மை வந்தடையாதபடி,␢ மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!⁾
45⁽மக்களினங்கள் இடையே எம்மை␢ குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!⁾
46⁽எங்கள் பகைவர் அனைவரும்␢ எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்!⁾
47⁽திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன!␢ சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!⁾
48⁽என் மக்களாகிய மகளின்␢ அழிவைக் கண்டு என்␢ கண்கள் குளமாயின!⁾
49⁽வற்றாத ஓடையென என் கண்கள்␢ நீர் சொரிகின்றன;⁾
50⁽ஆண்டவர் வானினின்று␢ கண்ணோக்கும் வரை,␢ ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!⁾
51⁽என் நகரின் புதல்வியர்␢ அனைவர் நிலை கண்டு,␢ என் உள்ளம் புலம்புகின்றது!⁾
52⁽காரணமின்றி என் பகைவர்,␢ பறவையை வேட்டையாடுவது போன்று,␢ என்னை வேட்டையாடினர்!⁾
53⁽உயிரோடு என்னைக் குழியில் தள்ளி,␢ என்மேல் கற்களை எறிந்தார்கள்!⁾
54⁽வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று!␢ ‘நான் தொலைந்தேன்’ என்றேன்.⁾
55⁽படுகுழியினின்று ஆண்டவரே!␢ உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.⁾
56⁽என் குரலை நீர் கேட்டீர்;␢ என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும்␢ உம் செவியை மூடிக்கொள்ளாதீர்!⁾
57⁽உம்மை நோக்கி நான்␢ கூவியழைத்த நாளில்,␢ என்னை அணுகி,␢ ‘அஞ்சாதே’ என்றீர்!⁾
58⁽என் தலைவரே!␢ என் பொருட்டு வாதாடினீர்!␢ என் உயிரை மீட்டருளினீர்!⁾
59⁽ஆண்டவரே! எனக்கு␢ இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்!␢ எனக்கு நீதி வழங்கும்!⁾
60⁽அவர்களின் பழிவாங்கும்␢ திட்டத்தையும்␢ எனக்கு எதிரான அவர்களின்␢ சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!⁾
61⁽ஆண்டவரே!␢ அவர்களின் வசைமொழிகளையும்␢ எனக்கு எதிரான அவர்களின்␢ சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!⁾
62⁽என் பகைவர் நாள் முழுவதும்␢ எனக்கெதிராக, முணுமுணுத்துத்␢ திட்டமிடுகின்றனர்.⁾
63⁽பாரும்! அவர்கள்␢ அமர்ந்தாலும் எழுந்தாலும்␢ என்னைப் பற்றியே␢ வசைபாடுகிறார்கள்!⁾
64⁽ஆண்டவரே!␢ அவர்களின் செயல்களுக்கேற்ப␢ அவர்களுக்குக்␢ கைம்மாறு அளித்தருளும்!⁾
65⁽நீர் அவர்கள் மனதைக்␢ கடினப்படுத்தும்!␢ உம் சாபம் அவர்கள்மேல்␢ விழச் செய்யும்!⁾
66⁽ஆண்டவரே, சினம் கொண்டு␢ அவர்களைப் பின்தொடரும்!␢ வானத்தின்கீழ் இல்லாதவாறு␢ அவர்களை அழித்தொழியும்!⁾