வாசகங்கள்
23 ஏப்ரல், 2028
Second Sunday of Easter
அன்றைய திருப்பலி
First Reading
திருத்தூதர் பணிகள் 5: 12-16
12மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர்.
13மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும், மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.
14ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.
15பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்;
16எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 118: 2-4, 13-15, 22-24
2⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!⁾
3⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!⁾
4⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ அனைவரும் சாற்றுவார்களாக!⁾
13⁽அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி␢ வீழ்த்த முயன்றனர்; ஆனால்,␢ ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.⁾
14⁽ஆண்டவரே என் ஆற்றல்;␢ என் பாடல்; என் மீட்பும் அவரே.⁾
15⁽நீதிமான்களின் கூடாரங்களில்␢ வெற்றியின் மகிழ்ச்சிக்குரல்␢ ஒலிக்கின்றது;␢ ஆண்டவரது வலக்கை␢ வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.⁾
22⁽கட்டுவோர் புறக்கணித்த கல்லே␢ கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!⁾
23⁽ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!␢ நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!⁾
24⁽ஆண்டவர் தோற்றுவித்த␢ வெற்றியின் நாள் இதுவே;␢ இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.⁾
Second Reading
திருவெளிப்பாடு 1: 9-11a, 12-13, 17-19
9உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.
10ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன்.
11“நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.⒫
12என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன்.
13அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.
17நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே.
18வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.
19எனவே, நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.
Alleluia
யோவான் 20: 29
29இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
Gospel
யோவான் 20:19-31
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
25மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.
27பின்னர், அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார்.
28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார்.
29இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.