1⁽நீர் என் உடன்பிறப்பாக␢ இருக்கக் கூடாதா!␢ என் அன்னையிடம் பால் குடித்தவராய்␢ இருக்கலாகாதா!␢ தெருவில் கண்டாலும்␢ நான் உம்மை முத்தமிடுவேனே!␢ அப்போது எவருமே␢ என்னை இகழமாட்டார்.⁾
2⁽உம்மை என் தாய் வீட்டுக்குக்␢ கூட்டி வருவேன்;␢ எனக்குக் கற்றுத் தந்தவளின்␢ மனைக்குள் கொணர்ந்திடுவேன்;␢ மணமூட்டிய திராட்சை இரசத்தை␢ உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்;␢ என் மாதுளம் பழச்சாற்றைப்␢ பருகத் தருவேன்.⁾
3⁽இடக்கையால் அவர்␢ என் தலையைத் தாங்கிக் கொள்வார்;␢ வலக்கையால் அவர்␢ என்னைத் தழுவிக் கொள்வார்.⁾
4⁽எருசலேம் மங்கையரே,␢ ஆணையிட்டுக் கேட்கின்றேன்;␢ காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?␢ தானே விரும்பும்வரை␢ அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?⁾
5⁽“யார் இவள்!␢ பாலைவெளியினின்று␢ எழுந்து வருபவள்;␢ தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு␢ வருபவள் யார் இவள்?”⁾⒯⁽கிச்சிலி மரத்தடியில்␢ நான் உம்மை எழுப்பினேன்;␢ அங்கேதான் உம்தாய்␢ பேறுகால வேதனையுற்றாள்.␢ அங்கேதான் உம்மைப் பெற்றவள்␢ பேறுகால வேதனையுற்றாள்.⁾
6⁽உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல்␢ என்னைப் பொறித்திடுக;␢ இலச்சினைப்போல்␢ உம் கையில் பதித்திடுக;␢ ஆம், அன்பு சாவைப்போல்␢ வலிமைமிக்கது;␢ அன்பு வெறி␢ பாதாளம்போல் பொறாதது;␢ அதன் பொறி,␢ எரிக்கும் நெருப்புப் பொறி;␢ அதன் கொழுந்து␢ பொசுக்கும் தீக்கொழுந்து.⁾
7⁽பெருங்கடலும்␢ அன்பை அணைக்க முடியாது;␢ வெள்ளப்பெருக்கும்␢ அதை மூழ்கடிக்க இயலாது;␢ அன்புக்காக ஒருவன்␢ தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம்␢ வாரியிறைக்கலாம்;␢ ஆயினும், அவன்␢ ஏளனம் செய்யப்படுவது உறுதி.⁾
8⁽நம்முடைய தங்கை சிறியவள்;␢ அவளுக்கு முலைகள்␢ முகிழ்க்கவில்லை;␢ அவளைப் பெண்பேச வரும்நாளில்␢ நம் தங்கைக்காக என் செய்வோம்?⁾
9⁽அவள் ஒரு மதிலானால்␢ அதன்மேல்␢ வெள்ளியரண்␢ கட்டிடுவோம்;␢ அவள் ஒரு கதவானால்␢ அதனை கேதுருப் பலகையால்␢ மூடிடுவோம்.⁾
10⁽நான் மதில்தான்;␢ என் முலைகள்␢ அதன் கோபுரங்கள் போல்வன;␢ அவர்தம் பார்வையில்␢ நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.⁾
11⁽பாகால்-ஆமோன் என்னுமிடத்தில்␢ சாலமோனுக்கு இருந்தது␢ ஒரு திராட்சைத் தோட்டம்,␢ திராட்சைத் தோட்டத்தை␢ அவர் காவலரிடம் ஒப்படைத்தார்;␢ அதன் கனிகளுக்காக எவரும்␢ ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.⁾
12⁽எனக்குரிய திராட்சைத் தோட்டம்␢ என்முன்னே உளது;␢ சாலமோனே,␢ அந்த ஆயிரம் வெள்ளிக்காசு␢ உம்மிடமே இருக்கட்டும்;␢ இருநூறு காசும்␢ பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.⁾
13⁽“தோட்டங்களில் வாழ்பவளே!␢ தோழர் கூர்ந்து கேட்கின்றனர்;␢ உன் குரலை␢ யான் கேட்கலாகாதோ!”⁾
14⁽“என் காதலரே!␢ விரைந்து ஓடிடுக;␢ கலைமான் அல்லது␢ மரைமான் குட்டிபோல␢ நறுமணம் நிறைந்த மலைகளுக்கு␢ விரைந்திடுக!”⁾