வாசகங்கள்
14 மார்ச், 2027
Fifth Sunday of Lent / Scrutiny
Lenten
First Reading
எரேமியா 31: 31-34
31இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.
32அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.⒫
33அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
34இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 51: 3-4, 12-13, 14-15
3⁽ஏனெனில், என் குற்றங்களை␢ நான் உணர்கின்றேன்;␢ என் பாவம் எப்போதும்␢ என் மனக்கண்முன் நிற்கின்றது.⁾
4⁽உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;␢ உம் பார்வையில் தீயது செய்தேன்;␢ எனவே, உம் தீர்ப்பினால்␢ உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;␢ உம் தண்டனைத் தீர்ப்பில்␢ நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.⁾
12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾
13⁽அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு␢ உம் வழிகளைக் கற்பிப்பேன்;␢ பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.⁾
14⁽கடவுளே! எனது மீட்பின் கடவுளே!␢ இரத்தப் பழியினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அப்பொழுது, என் நா␢ உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.⁾
15⁽என் தலைவரே!␢ என் இதழ்களைத் திறந்தருளும்;␢ அப்பொழுது, என் வாய்␢ உமக்குப் புகழ் சாற்றிடும்.⁾
Second Reading
எபிரேயர் 5: 7-9
7அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.
8அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
9அவர் நிறைவுள்ளவராகி, தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
Verse Before the Gospel
யோவான் 12: 26
26எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.
Gospel
யோவான் 12: 20-33
20வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.
21இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
22பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.⒫
23இயேசு அவர்களைப் பார்த்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
26எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.
27மேலும் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.
28தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது.
29அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர்.
30இயேசு அவர்களைப் பார்த்து, “இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.
31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
32நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்றார்.
33தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.⒫
Scrutiny
First Reading
எசேக்கியேல் 37: 12-14
12எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.
13அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
14என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 130: 1-2, 3-4, 5-6, 7-8
1⁽ஆண்டவரே! ஆழ்ந்த␢ துயரத்தில் இருக்கும் நான்␢ உம்மை நோக்கி␢ மன்றாடுகிறேன்;⁾
2⁽ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் விண்ணப்பக் குரலை␢ உம்முடைய செவிகள்␢ கவனத்துடன் கேட்கட்டும்.⁾
3⁽ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை␢ மனத்தில் கொண்டிருந்தால்,␢ யார்தான் நிலைத்து நிற்க முடியும்?⁾
4⁽நீரோ மன்னிப்பு அளிப்பவர்;␢ மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.⁾
5⁽ஆண்டவருக்காக ஆவலுடன் நான்␢ காத்திருக்கின்றேன்;␢ என் நெஞ்சம் காத்திருக்கின்றது;␢ அவரது சொற்களுக்காக␢ ஆவலுடன் காத்திருக்கின்றேன்.⁾
6⁽விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ என் நெஞ்சம் என் தலைவருக்காய்␢ ஆவலுடன் காத்திருக்கின்றது.⁾
7⁽இஸ்ரயேலே!␢ ஆண்டவரையே நம்பியிரு;␢ பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;␢ மிகுதியான மீட்பு␢ அவரிடமே உண்டு.⁾
8⁽எல்லாத் தீவினைகளினின்றும்␢ இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!⁾
Second Reading
உரோமையர் 8: 8-11
8ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.⒫
9ஆனால், கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல.
10பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.
11மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.⒫
Verse Before the Gospel
யோவான் 11: 25a, 26
25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
Gospel
யோவான் 11: 1-45
1பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.
2இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.
3இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள்.
4அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார்.
5மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
6இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.⒫
7பின்னர், தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார்.
8அவருடைய சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள்.
9இயேசு மறுமொழியாக, “பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில், பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.
10ஆனால், இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில், அப்போது* ஒளி இல்லை” என்றார்.
11இவ்வாறு கூறியபின், “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்றார்.
12அவருடைய சீடர் அவரிடம், “ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்” என்றனர்.
13இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
14அப்போது இயேசு அவர்களிடம், “இலாசர் இறந்து விட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,
15“நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில், நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்” என்றார்.
16திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்.
17இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
18பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்* தொலையில் இருந்தது.
19சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
20இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
21மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
22இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார்.
23இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
24மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார்.
25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
27மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
28இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார்.
29இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.
30இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.
31வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
32இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார்.
33மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,
34“அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள்.
35அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
36அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள்.
37ஆனால், அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.
38இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
39“கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார்.
40இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.
41அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
42நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும், நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.
43இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார்.
44இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
45மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.