வாசகங்கள்
7 பிப்ரவரி, 2026
Saturday of the Fourth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
1 அரசர்கள் 3:4-13
4ஒருநாள் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார்.
5அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்று கடவுள் கேட்டார்.
6அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர்.
7என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை.
8இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர்.
9எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.⒫
10சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது.
11கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.
12இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.
13அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால், உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 119:9, 10, 11, 12, 13, 14
9⁽இளைஞர் தம் நடத்தையை␢ மாசற்றதாய்க் காத்துக் கொள்வது␢ எவ்வாறு? உம் வாக்கைக்␢ கடைப்பிடிப்பதால் அன்றோ?⁾
10⁽முழுமனத்தோடு␢ நான் உம்மைத் தேடுகின்றேன்;␢ உம் கட்டளைகளைவிட்டு␢ என்னை விலகவிடாதேயும்.⁾
11⁽உமக்கெதிராய்␢ நான் பாவம் செய்யாதவாறு␢ உமது வாக்கை␢ என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.⁾
12⁽ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்;␢ எனக்கு உம் விதிமுறைகளைக்␢ கற்பித்தருளும்.⁾
13⁽உம் வாயினின்று வரும்␢ நீதித்தீர்ப்புகளை எல்லாம்␢ என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.⁾
14⁽பெருஞ்செல்வத்தில்␢ மகிழ்ச்சி அடைவதுபோல்,␢ நான் உம் ஒழுங்குமுறைகளின்படி␢ நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾
Alleluia
யோவான் 10:27
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel
மாற்கு 6:30-34
30திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
31அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
32அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
33அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
34அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.