வாசகங்கள்
6 மார்ச், 2026
Friday of the Second Week of Lent
அன்றைய திருப்பலி
Reading I
தொடக்க நூல் 37:3-4, 12-13, 17-28
3இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.
4அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.⒫
12அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.
13இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி: “உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்,” என்று கூற, அவர், “இதோ நான் தயார்” என்றார்.
17அதற்கு அம்மனிதன், “அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள். தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை நான் கேட்டேன்” என்று பதிலளித்தான். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.
18தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
19அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ, வருகிறான் கனவின் மன்னன்!
20நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்” என்றனர்.
21ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்” என்றார்.
22ரூபன் அவர்கள் நோக்கி, “அவன் இரத்தத்தை சிந்தாதீர்கள். அவனைக் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்” என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.
23யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு,
24அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.⒫
25பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
26அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, “நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்?
27வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம். ஏனெனில், அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்” என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.
28ஆகையால், மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 105:16-17, 18-19, 20-21
16⁽நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;␢ உணவெனும் ஊன்றுகோலை␢ முறித்துவிட்டார்.⁾
17⁽அவர்களுக்கு முன் ஒருவரை␢ அனுப்பிவைத்தார்;␢ யோசேப்பு என்பவர்␢ அடிமையாக விற்கப்பட்டார்.⁾
18⁽அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு␢ அவரைத் துன்புறுத்தினர்.␢ அவர்தம் கழுத்தில்␢ இரும்புப் பட்டையை மாட்டினர்.⁾
19⁽காலம் வந்தது;␢ அவர் உரைத்தது நிறைவேறிற்று;␢ ஆண்டவரின் வார்த்தை␢ அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.⁾
20⁽மன்னர் ஆளனுப்பி␢ அவரை விடுதலை செய்தார்;␢ மக்களினங்களின் தலைவர்␢ அவருக்கு விடுதலை அளித்தார்;⁾
21⁽அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்␢ தலைவர் ஆக்கினார்;␢ தம் உடைமைகளுக்கெல்லாம்␢ பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.⁾
Verse Before the Gospel
யோவான் 3:16
16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
Gospel
மத்தேயு 21:33-43, 45-46
33“மேலும், ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி* வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
35தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
36மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
37தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
38அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
39பின்பு, அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
40எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.
41அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.
42இயேசு அவர்களிடம், ⁽“‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’⁾ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?
43எனவே, உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
45தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.
46அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.