வாசகங்கள்
22 ஆகஸ்ட், 2027
Twenty-First Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
யோசுவா 24: 1-2a, 15-17, 18b
1செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர்.
2யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: ‘முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.
15ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.⒫
16மக்கள் மறுமொழியாக, “ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!
17ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார்.
18ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” என்றனர்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 34: 2-3, 16-17, 18-19, 20-21, 22-23
2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾
3⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾
16⁽ஆண்டவரின் முகமோ␢ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;␢ அவர், அவர்களின் நினைவே␢ உலகில் அற்றுப்போகச் செய்வார்.⁾
17⁽நீதிமான்கள் மன்றாடும்போது,␢ ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;␢ அவர்களை அனைத்து␢ இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.⁾
18⁽உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்␢ ஆண்டவர் இருக்கின்றார்;␢ நைந்த நெஞ்சத்தாரை␢ அவர் காப்பாற்றுகின்றார்.⁾
19⁽நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;␢ அவை அனைத்தினின்றும்␢ ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.⁾
20⁽அவர்களின் எலும்புகளை எல்லாம்␢ அவர் பாதுகாக்கின்றார்;␢ அவற்றுள் ஒன்றும் முறிபடாது.⁾
21⁽தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;␢ நேர்மையாளரை வெறுப்போர்␢ தண்டனை பெறுவர்.⁾
22⁽ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை␢ மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம்␢ புகும் எவரும் தண்டனை அடையார்.⁾
Second Reading
எபேசியர் 5: 21-32 or எபேசியர் 5: 2a, 25-32
21கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
22திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.
23ஏனெனில், கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர்.
24திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.⒫
25திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில், கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
26வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார்.
27அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.
28அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார்.
29தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.
30ஏனெனில், நாம் அவரது உடலின் உறுப்புகள்.
31⁽“இதனால் கணவர்␢ தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத்␢ தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்;␢ இருவரும் ஒரே உடலாயிருப்பர்”⁾ என மறைநூல் கூறுகிறது.
32இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.
Alleluia
யோவான் 6: 63c, 68c
63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.
68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
Gospel
யோவான் 6: 60-69
60அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, “இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக் கொண்டனர்.
61இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?
62அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?
63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.
64அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை” என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.
65மேலும் அவர், “இதன் காரணமாகத்தான் ‘என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது’ என்று உங்களுக்குக் கூறினேன்” என்றார்.
66அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.
67இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.
68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
69நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.