1⁽அதற்குத் தேமானியனான எலிப்பாசு␢ சொன்னான்:⁾
2⁽வெற்று அறிவினால் ஞானி␢ விடையளிக்கக்கூடுமோ?␢ வறண்ட கீழ்க்காற்றினால்␢ வயிற்றை அவன் நிரப்பவோ?⁾
3⁽பயனிலாச் சொற்களாலோ,␢ பொருளிலாப் பொழிவினாலோ␢ அவன் வழக்காடத் தகுமோ?⁾
4⁽ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;␢ இறைச்சிந்தனை இல்லாது போனீர்.⁾
5⁽உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;␢ வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.⁾
6⁽கண்டனம் செய்தது உம் வாயே;␢ நானல்ல; உம் உதடே␢ உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.⁾
7⁽மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?␢ மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?⁾
8⁽கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?␢ ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?⁾
9⁽எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?␢ எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?⁾
10⁽நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,␢ நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர்␢ எங்களிடை உள்ளனர்.⁾
11⁽கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்␢ உமக்கு அற்பமாயினவோ?⁾
12⁽மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?␢ உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?⁾
13⁽அதனால், இறைவனுக்கு எதிராய்␢ உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;␢ வாயில் வந்தபடி␢ வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.⁾
14⁽மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?␢ நேர்மையாளராய் இருக்கப்␢ பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?⁾
15⁽வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;␢ வானங்களும் அவர்தம் கண்முன்␢ தூயவையல்ல;⁾
16⁽தீமையை தண்ணீர் போல் குடிக்கும்␢ அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்␢ எத்துணை இழிந்தோர் ஆவர்?⁾
17⁽கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;␢ நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;⁾
18⁽ஞானிகள் உரைத்தவை அவை!␢ அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!⁾
19⁽அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;␢ அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.⁾
20⁽துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர்␢ தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள்␢ கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.⁾
21⁽திகிலளிக்கும் ஒலி␢ அவர்களின் செவிகளில் கேட்கும்;␢ நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.⁾
22⁽அவர்கள் இருளினின்று தப்பிக்கும்␢ நம்பிக்கை இழப்பர்;␢ வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.⁾
23⁽எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;␢ இருள்சூழ்நாள்␢ அண்மையில் உள்ளதென்று அறிவர்.⁾
24⁽இன்னலும் இடுக்கணும்␢ அவர்களை நடுங்க வைக்கும்;␢ போருக்குப் புறப்படும் அரசன்போல்␢ அவை அவர்களை மேற்கொள்ளும்.⁾
25⁽ஏனெனில், இறைவனுக்கு எதிராக␢ அவர்கள் கையை ஓங்கினர்;␢ எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.⁾
26⁽வணங்காக் கழுத்தோடும்␢ வலுவான பெரிய கேடயத்தோடும்,␢ அவரை எதிர்த்து வந்தனர்.⁾
27⁽ஏனெனில், அவர்களின் முகத்தைக்␢ கொழுப்பு மூடியுள்ளது;␢ அவர்களின் தொந்தி பருத்துள்ளது.⁾
28⁽பாழான பட்டணங்களிலும்,␢ எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,␢ இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும்␢ அவர்கள் குடியிருப்பர்.⁾
29⁽அவர்கள் செல்வர் ஆகார்;␢ அவர்களின் சொத்தும் நில்லாது;␢ அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.⁾
30⁽இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;␢ அவர்களது தளிரை அனல் வாட்டும்.␢ அவர்களது மலர்␢ காற்றில் அடித்துப்போகப்படும்.⁾
31⁽வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;␢ ஏனெனில், வெறுமையே␢ அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.⁾
32⁽அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே␢ அது நடக்கும்;␢ அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;⁾
33⁽பிஞ்சுகளை உதிர்க்கும்␢ திராட்சைச் செடிபோன்றும்␢ பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும்␢ அவர்கள் இருப்பர்.⁾
34⁽ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்␢ கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்␢ கூடாரம் எரியுண்ணும்.⁾
35⁽இன்னலைக் கருவுற்று அவர்கள்␢ இடுக்கண் ஈன்றெடுப்பர்;␢ வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.⁾