1⁽அதற்குச் சூகாயனான பில்தாது␢ கூறிய பதில்:⁾
2⁽எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்?␢ உம் வாய்ச்சொற்கள்␢ புயல்காற்றைப் போல் இருக்கின்றன.⁾
3⁽இறைவனே நீதியைப் புரட்டுவாரா?␢ எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?⁾
4⁽உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப்␢ பாவம் செய்ததால், குற்றப்பழியின்␢ ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.⁾
5⁽ஆனால், நீர் இறைவனை␢ ஆர்வத்துடன் நாடினால்,␢ எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,⁾
6⁽நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய்␢ இருந்தால் இப்பொழுது கூட␢ அவர் உம்பொருட்டு எழுந்திடுவார்,␢ உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.⁾
7⁽உம்முடைய தொடக்கம்␢ எளிமையாக இருப்பினும்,␢ உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.⁾
8⁽முன்னோரின் தலைமுறையைக்␢ கேட்டுப்பாரும்;␢ அன்னாரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.⁾
9⁽நேற்றுத் தோன்றிய நாம் ஒன்றும் அறியோம்;␢ நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,⁾
10⁽அவர்களன்றோ உமக்கு␢ அறிவித்து உணர்த்துவர்!␢ புரிந்த வார்த்தைகளை␢ உமக்குப் புகட்டுவர்!⁾
11⁽சேறின்றி நாணல் தழைக்குமா?␢ நீரின்றிக் கோரை வளருமா?⁾
12⁽இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே␢ எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.⁾
13⁽இறைவனை மறப்போரின் கதி இதுவே;␢ இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;⁾
14⁽அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்;␢ அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.⁾
15⁽யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால்,␢ அது நில்லாதுபோம்; யாராவது அதைப்␢ பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.⁾
16⁽பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்;␢ படரும் தோட்டமெங்கும்␢ அவர்களின் கிளைகள்.⁾
17⁽கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள்␢ கற்களிடையே இடம் தேடும்.⁾
18⁽அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால்,␢ ‘உங்களை நான் கண்டதேயில்லை’ என␢ உதறிவிடும் அவ்விடம்.⁾
19⁽பார்! அவர்கள் தம் வாழ்வில்␢ கண்ட இன்பம் இதுவே:␢ மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.⁾
20⁽இதோ! கறையிலாதவரை␢ இறைவன் கைவிடுவதில்லை;␢ காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.⁾
21⁽இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும்,␢ இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.⁾
22⁽உம்மைப் பகைப்பவர்␢ வெட்கத்தால் உடுத்தப்படுவர்;␢ தீயோர் கூடாரம் இல்லாது போகும்.⁾