யோபு 36

முந்திய அடுத்த
1எலிகூ தொடர்ந்து பேசலானான்: 2⁽சற்றுப் பொறும்;␢ காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய்␢ நான் கூற வேண்டியவற்றை.⁾ 3⁽தொலையிலிருந்து␢ என் அறிவைக் கொணர்வேன்;␢ எனை உண்டாக்கியவர்க்கு␢ நேர்மையை உரித்தாக்குவேன்.⁾ 4⁽ஏனெனில், மெய்யாகவே␢ பொய்யன்று என் சொற்கள்;␢ அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.⁾ 5⁽இதோ! இறைவன் வல்லவர்;␢ எவரையும் புறக்கணியார்;␢ அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.⁾ 6⁽கொடியவரை அவர் வாழவிடார்;␢ ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;⁾ 7⁽நேர்மையாளர்மீது கொண்ட␢ பார்வையை அகற்றார்;␢ அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;␢ என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.⁾ 8⁽ஆனால் அவர்கள்␢ சங்கிலியால் கட்டுண்டாரெனில்,␢ வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,⁾ 9⁽அவர்கள் செய்ததையும் மீறியதையும்,␢ இறுமாப்புடன் நடந்ததையும்␢ எடுத்து இயம்புவார்.⁾ 10⁽அறிவுரைகளுக்கு␢ அவர்கள் செவியைத் திறப்பார்;␢ தீச்செயலிலிருந்து திரும்புமாறு␢ ஆணையிடுவார்.⁾ 11⁽அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,␢ வளமாய்த் தங்கள் நாள்களையும்␢ இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.⁾ 12⁽செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.␢ அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.⁾ 13⁽தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;␢ அவர்களை அவர் கட்டிப்போடுகையில்␢ உதவிக்காகக் கதறமாட்டார்.⁾ 14⁽அவர்கள் இளமையில் மடிவர்;␢ காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.⁾ 15⁽துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;␢ வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.⁾ 16⁽இடுக்கண் வாயினின்று␢ உங்களை இழுத்துக் காத்தார்;␢ ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.␢ உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.⁾ 17⁽பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;␢ தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.⁾ 18⁽வளமையால் வழிபிறழாமல்␢ பார்த்துக்கொள்ளும்;␢ நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.⁾ 19⁽உம் நிறைந்த செல்வமும்␢ வல்லமையின் முழு ஆற்றலும்␢ இன்னலில் உமக்கு உதவுமா?⁾ 20⁽இருந்த இடத்திலேயே மக்கள் மடியும்␢ இரவுக்காக ஏங்காதீர்.⁾ 21⁽துன்பத்தைவிட தீச்செயலையே␢ நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே␢ அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.⁾ 22⁽இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;␢ அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?⁾ 23⁽அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?␢ அவர்க்கு ‘நீர் வழிதவறினிர்” எனச்␢ சொல்ல வல்லவர் யார்?⁾ 24⁽அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.␢ மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.⁾ 25⁽மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;␢ மனிதன் தொலையிலிருந்தே␢ அதை நோக்குவான்.⁾ 26⁽இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;␢ நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;␢ அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;␢ கணக்கிட முடியாதவை.⁾ 27⁽நீர்த்துளிகளை அவர்␢ ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை␢ மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.⁾ 28⁽முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;␢ மாந்தர்மேல் அவற்றை␢ மிகுதியாகப் பெய்கின்றன.⁾ 29⁽பரவும் முகில்களையும்␢ அவர்தம் மணிப்பந்தலின்␢ ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?⁾ 30⁽இதோ! தம்மைச் சுற்றி␢ மின்னல் ஒளிரச் செய்கின்றார்.␢ கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.⁾ 31⁽இவற்றால், மக்களினங்கள்மீது␢ தீர்ப்பளிக்கின்றார்;␢ அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.⁾ 32⁽மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;␢ இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.⁾ 33⁽இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;␢ புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.⁾