1⁽உலகின் முதல் தந்தை தனிமையாகப்␢ படைக்கப்பட்டபொழுது ஞானம்␢ அவரைப் பேணிக் காத்தது;␢ அவருடைய குற்றங்களிலிருந்து␢ அவரை விடுவித்தது.⁾
2⁽அனைத்தையும் ஆளும்␢ ஆற்றலை அவருக்கு அளித்தது.⁾
3⁽நீதியற்றவன் ஒருவன்␢ தன் சினத்தினால்␢ ஞானத்தைவிட்டு அகன்றான்;␢ சீற்றத்தினால்␢ தன் உடன்பிறப்பைக் கொன்றதால் அவனும்␢ அழியலானான்.⁾
4⁽அவன்பொருட்டு மண்ணுலகைப்␢ பெரும் வெள்ளம் மூழ்கடித்தபொழுது,␢ ஞானம் மீண்டும்␢ அதைக் காப்பாற்றியது;␢ நீதிமானை ஒரு சிறிய␢ மரத்துண்டால் வழி நடத்தியது.⁾
5⁽மக்களினங்கள் தீமையுடன்␢ கூட்டுச்சேர்ந்து␢ குழப்பத்திற்கு உள்ளானபோது␢ ஞானம் நீதிமானைக்␢ கண்டுகொண்டது;␢ அவரைக் கடவுள் திருமுன்␢ மாசற்றவராகக் காத்தது;␢ தம் பிள்ளைபால் கொண்டிருந்த␢ பற்றை மேற்கொள்ள␢ அவருக்குத் துணிவை அளித்தது.⁾
6⁽இறைப்பற்றில்லாதவர்கள் அழிந்தபோது␢ ஞானம் நீதிமானைக் காப்பாற்றியது.␢ ஐந்து நகர்கள்மீது␢ இறங்கி வந்த நெருப்பிலிருந்து␢ அவரும் உயிர் தப்பினார்.⁾
7⁽அவர்களது தீயொழுக்கத்துக்குச்␢ சான்றாக,␢ அந்த நகரங்கள் புகை உமிழும்␢ பாழ்வெளியாக மாற்றப்பட்டன;␢ அங்குச் செடிகள் என்றுமே கனியாத␢ காய்களைக் கொடுக்கின்றன;␢ பற்றுறுதியில்லா ஆன்மாவின்␢ நினைவுச்சின்னமான␢ உப்புத்தூணும் அங்கேதான்␢ நின்றுகொண்டிருக்கிறது.⁾
8⁽அவர்கள் ஞானத்தை␢ ஒரு பொருட்டாகக் கருதாததால்,␢ நன்மையைக் கண்டுணர␢ இயலாமற்போனார்கள்;␢ மேலும், தங்கள் அறிவின்மையின்␢ அடையாளத்தை மனித இனத்திற்கு␢ விட்டுச் சென்றார்கள்.␢ அதனால் அவர்கள் செய்த தவறுகள்␢ புலப்படாமற் போகா.⁾
9⁽ஆனால் தனக்குப் பணிபுரிந்தவர்களை␢ ஞானம் துன்ப துயரங்களிலிருந்து␢ விடுவித்தது.⁾
10⁽தம் சகோதரனின் சினத்துக்குத்␢ தப்பியோடிய நீதிமான் ஒருவரை␢ ஞானம் நேர்மையான வழியில்␢ நடத்திச் சென்றது;␢ இறையரசை அவருக்குக் காட்டியது;␢ வானதூதர்பற்றிய* அறிவை␢ அவருக்குக் கொடுத்தது;␢ உழைப்பில் அவர்␢ வளமையுறச் செய்தது;␢ அவரது உழைப்பின்␢ பயனைப் பெருக்கியது.⁾
11⁽அவரை ஒடுக்கியோர்␢ பேரவாக் கொண்டபோது␢ அது அவருக்குத் துணை நின்று,␢ அவரைச் செல்வராக்கியது.⁾
12⁽பகைவரிடமிருந்து அது␢ அவரைப் பாதுகாத்தது;␢ தாக்கப் பதுங்கியிருந்தோரிடமிருந்து␢ அவரைக் காப்பாற்றியது;␢ கடும் போராட்டத்தில்␢ அவருக்கு வெற்றி தந்தது.␢ இவ்வாறு இறைப்பற்று␢ எல்லாவற்றையும்விட␢ வலிமை மிக்கது என்று அவர் உணரச் செய்தது.⁾
13⁽நீதிமான் ஒருவர்␢ விலைக்கு விற்கப்பட்டபொழுது␢ ஞானம் அவரைக் கைவிடவில்லை;␢ பாவத்திலிருந்து அவரை விடுவித்தது.⁾
14⁽இருட்டறைக்குள் அவரோடு␢ அது இறங்கிச் சென்றது;␢ அரச செங்கோலையும்,␢ அவரை ஒடுக்கியோர்மீது அதிகாரத்தையும்␢ அவருக்கு அளிக்கும்வரை␢ விலங்கிடப்பட்டிருந்த அவரை விட்டு␢ அது விலகவில்லை.␢ அவர்மேல் குற்றம் சுமத்தியோர்␢ பொய்யர் என்பதை மெய்ப்பித்தது;␢ அவருக்கோ␢ முடிவில்லா மாட்சியை அளித்தது.⁾
15⁽ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து␢ தூய மக்களையும்␢ மாசற்ற வழி மரபினரையும்␢ ஞானம் விடுவித்தது.⁾
16⁽அது ஆண்டவருடைய ஊழியர்␢ ஒருவரின் ஆன்மாவில் நுழைந்தது.␢ கொடிய மன்னர்களை␢ வியத்தகு செயல்களாலும்␢ அடையாளங்களாலும் எதிர்த்து நின்றது.⁾
17⁽தூயவர்களின் உழைப்புக்கு␢ அது கைம்மாறு கொடுத்தது;␢ வியப்புக்குரிய வழியில்␢ அவர்களை நடத்திச் சென்றது;␢ பகலில் அவர்களுக்கு நிழலாகவும்␢ இரவில் விண்மீன் சுடராகவும்␢ இருந்தது.⁾
18⁽செங்கடல்மீது அது அவர்களை␢ அழைத்துச்சென்றது;␢ ஆழ்கடல் வழியாக␢ அவர்களை நடத்திச் சென்றது.⁾
19⁽அவர்களின் பகைவர்களை␢ அது நீரினுள் அமிழ்த்தியது;␢ பின், ஆழ்கடலிலிருந்து␢ அவர்களை வெளியே உமிழ்ந்தது.⁾
20⁽ஆகையால் நீதிமான்கள்␢ இறைப்பற்றில்லாதவர்களைக்␢ கொள்ளையடித்தார்கள்;␢ ஆண்டவரே,␢ உமது திருப்பெயரைப்␢ பாடிப் புகழ்ந்தார்கள்;␢ வெற்றி அளிக்கும் உமது␢ கைவன்மையை␢ ஒருமிக்கப் போற்றினார்கள்.⁾
21⁽ஏனெனில்␢ பேச முடியாதவர்களின்␢ வாயை ஞானம் திறந்தது;␢ குழந்தைகளின் நாவுக்குத்␢ தெளிவான பேச்சைத் தந்தது.⁾