1⁽உம் தூயவர்களுக்கோ␢ பேரொளி இருந்தது.␢ அவர்களுடைய குரலை␢ எதிரிகள் கேட்டார்கள்.␢ ஆனால் அவர்களின்␢ உருவங்களைக் காணவில்லை.␢ தங்களைப் போலத் துன்புறாததால்␢ தூயவர்களைப் பேறுபெற்றோர்␢ என்று கருதினார்கள்.⁾
2⁽அப்பொழுது உம் தூயவர்கள்␢ அவர்களுக்குத் தீமை எதுவும்␢ செய்யாததால், எகிப்தியர்கள்␢ நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்;␢ தங்களது பழைய பகைமைக்கு␢ மன்னிப்புக் கேட்டார்கள்.*⁾
3⁽இருளுக்கு மாறான␢ ஒளிப்பிழம்பாம் நெருப்புத் தூணை␢ உம் மக்களுக்குக் கொடுத்தீர்.␢ முன்பின் அறியாத பாதையில்␢ அது அவர்களுக்கு␢ வழி காட்டியாய் விளங்கியது;␢ மாட்சி பொருந்திய அப்பயணத்தில்␢ அது வெம்மை தணிந்த␢ கதிரவனாய் இருந்தது.⁾
4⁽திருச்சட்டத்தின் அழியாத ஒளியை␢ உலகிற்கு வழங்க வேண்டிய␢ உம் மக்களை எகிப்தியர்கள்␢ சிறைப்பிடித்தார்கள்.␢ இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே␢ இருளில் அடைக்கப்பட␢ வேண்டியது பொருத்தமே.⁾
5⁽எகிப்தியர்கள் உம் தூயவர்களின்␢ குழந்தைகளைக் கொல்லத்␢ திட்டமிட்டிருந்தார்கள்.␢ அப்பொழுது ஒரு குழந்தை மட்டும்␢ சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது.␢ எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக␢ அவர்களின் பெருந்தொகையான␢ குழந்தைகளின் மாய்ந்துவிட்டீர்;␢ அவர்கள் அனைவரையும்␢ பெரும் வெள்ளத்தில்␢ ஒருசேர மூழ்கடித்தீர்.⁾
6⁽தாங்கள் நம்பியிருந்த␢ வாக்குறுதிகளைத் தெளிவாக␢ அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி␢ அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு␢ முன்னறிவிக்கப்பட்டது.⁾
7⁽நீதிமான்களின் மீட்பையும்␢ அவர்களுடைய பகைவர்களின்␢ அழிவையும் உம் மக்கள்␢ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.⁾
8⁽எங்கள் பகைவர்களை␢ நீர் தண்டித்த அந்த ஒரே செயலால்␢ உம்மிடம் எங்களை␢ அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.⁾
9⁽நல்லவர்களின் தூய மக்கள்␢ மறைவாகப் பலி செலுத்தினார்கள்;␢ நன்மைகளையும் இடர்களையும்␢ ஒன்றுபோலப்␢ பகிர்ந்து கொள்வார்கள்␢ என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள்␢ ஒருமித்து உடன்பட்டார்கள்;␢ மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை␢ அதே வேளையில்␢ பாடிக் கொண்டிருந்தார்கள்.⁾
10⁽ஆனால் பகைவர்கள் கதறியழுத␢ குரல்கள் எதிரொலித்தன;␢ தங்கள் குழந்தைகளுக்காக␢ எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.⁾
11⁽அடிமையும் தலைவரும்␢ ஒரே வகையில்␢ தண்டிக்கப்பட்டார்கள்;␢ குடிமகனும் மன்னரும்␢ ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்;⁾
12⁽எண்ணிலடங்காதோர்␢ ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி,␢ எல்லாரும் ஒருமிக்க␢ மடிந்து கிடந்தனர்.␢ உயிரோடிருந்தவர்களால்␢ அவர்களைப் புதைக்கவும்␢ இயலவில்லை.␢ அவர்களின் பெருமதிப்பிற்குரிய␢ வழித் தோன்றல்கள்␢ ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.⁾
13⁽மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து␢ அவர்கள் எதையுமே␢ நம்ப மறுத்துவிட்டாலும்,␢ தங்கள் தலைப்பேறுகள்␢ கொல்லப்பட்டபோது,␢ இம்மக்கள் ‘இறைமக்கள்’␢ என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.⁾
14⁽எல்லாம் அமைதியில்␢ ஆழ்ந்திருந்தபோது,␢ நள்ளிரவு கடந்துவிட்ட␢ வேளையில்,⁾
15⁽எல்லாம் வல்ல உம் சொல்␢ விண்ணகத்திலுள்ள␢ அரியணையைவிட்டு எழுந்து,␢ அஞ்சா நெஞ்சம் கொண்ட␢ போர்வீரனைப்போல்␢ அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட␢ நாட்டின்மீது வந்து பாய்ந்தது.⁾
16⁽உமது தெளிவான␢ கட்டளையாகிய கூரிய வாளை␢ ஏந்தியவண்ணம்␢ அது நின்றுகொண்டு,␢ எல்லாவற்றையும் சாவினால்␢ நிரப்பியது;␢ மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த␢ போதிலும்,␢ விண்ணகத்தை தொட்டுக்␢ கொண்டிருந்தது.⁾
17⁽உடனே அச்சுறுத்தும் கனவுக்␢ காட்சிகள்␢ அவர்களைக் கலங்கடித்தன;␢ எதிர்பாராத பேரச்சம்␢ அவர்களைத் தாக்கியது.⁾
18⁽அங்கு ஒருவரும்␢ இங்கு ஒருவருமாக␢ அவர்கள் குற்றுயிராய்␢ விழுந்தபோது,␢ தாங்கள் மடிவதன்␢ காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.⁾
19⁽ஏனெனில் தாங்கள் பட்ட␢ துன்பத்தின் காரணத்தை␢ அவர்கள் தெரிந்து கொள்ளாமல்␢ சாகாதபடி␢ அவர்களைத் தொல்லைப்படுத்திய␢ கனவுகள் அதை␢ முன்னறிவித்திருந்தன.⁾
20⁽நீதிமான்களும் இறப்பை␢ நுகர நேர்ந்தது.␢ பாலைநிலத்தில் இருந்த␢ மக்கள் கூட்டம்␢ கொள்ளை நோயால் தாக்குண்டது.␢ ஆயினும் உமது சினம்␢ நீண்ட காலம் நீடிக்கவில்லை.⁾
21⁽குற்றமற்றவர் ஒருவர்␢ அவர்களுக்காகப் பரிந்துபேச␢ விரைந்தார்;␢ திருப்பணி என்னும்␢ தம் படைக்கலம் தாங்கியவராய்,␢ மன்றாட்டையும் பரிகாரத்திற்கான␢ நறுமணப்புகையையும்␢ ஏந்தியவராய்,␢ உமது சினத்தை எதிர்த்து நின்று␢ அழிவை முடிவுறச் செய்தார்;␢ இவ்வாறு, தாம் உம்␢ அடியார் என்று காட்டினார்.⁾
22⁽உடலின் வலிமையாலோ␢ படைக்கலங்களின் ஆற்றலாலோ␢ அவர் உமது சினத்தை␢ மேற்கொள்ளவில்லை;␢ ஆனால் எங்கள் மூதாதையர்க்கு␢ அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும்␢ உடன்படிக்கையையும் நினைவூட்டி␢ ‘வதைப்போனை’த் தம் சொல்லால்␢ தோல்வியுறச் செய்தார்.⁾
23⁽செத்தவர்களின் பிணங்கள்␢ ஒன்றன்மீது ஒன்று விழுந்து␢ பெரும் குவியலாய்க் கிடந்தன.␢ அப்போது அவர் குறுக்கிட்டு␢ உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி,␢ எஞ்சியிருந்தோரை␢ அது தாக்காமல் செய்துவிட்டார்.⁾
24⁽அவர் அணிந்திருந்த நீண்ட␢ ஆடையில் உலகு அனைத்தும்␢ பொறிக்கப்பட்டிருந்தது.␢ அதில் இருந்த␢ நான்கு கல் வரிசையிலும்␢ மூதாதையரின் மாட்சிமிகு␢ பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.␢ அவர் தலையில் இருந்த␢ மணிமுடியில்␢ உமது மாட்சி வரையப்பட்டிருந்தது.⁾
25⁽“அழிப்போன்” இவற்றைக் கண்டு␢ பின்வாங்கினான்.␢ அச்சம் அவனை ஆட்கொண்டது.␢ உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே␢ அவனுக்குப் போதுமானது.⁾