1⁽எனவே அவர்கள் அவற்றைப்␢ போன்ற உயிரினங்களால்␢ தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்;␢ விலங்குக் கூட்டத்தால்␢ வதைக்கப்பட்டார்கள்.⁾
2⁽இத்தகைய தண்டனைக்கு மாறாக␢ நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்;␢ சுவை மிகுந்த அரிய உணவாகிய␢ காடைகளை அவர்களுக்கு␢ உண்ணக் கொடுத்தீர்;␢ இவ்வாறு,␢ அவர்களது ஆவலைத் தணித்தீர்.⁾
3⁽எகிப்தியர்கள் உணவு அருந்த␢ விரும்பியபோதிலும்,␢ அவர்கள்மீது ஏவப்பட்ட␢ அருவருக்கத்தக்க␢ விலங்குகளால் உணவின்மேல்␢ அவர்களுக்கு இருந்த நாட்டமே␢ அற்றுப் போயிற்று.␢ உம் மக்களோ சிறிது காலம்␢ வறுமையில் வாடியபின்␢ அருஞ்சுவை உணவை உண்டார்கள்.⁾
4⁽ஏனெனில் கொடுமை செய்தவர்கள்␢ கடுமையான பற்றாக்குறைக்கு␢ ஆளாகவேண்டியிருந்தது.␢ உம் மக்களுக்கோ அவர்களுடைய␢ பகைவர்கள் எவ்வாறு அல்லல்␢ படுகிறார்கள் என்று மட்டும்␢ காட்டவேண்டியிருந்தது.⁾
5⁽உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள்␢ கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது,␢ நெளிந்து வந்த␢ நச்சுப் பாம்புகளின் கடியால்␢ அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது,␢ உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.⁾
6⁽எச்சரிக்கப்பட வேண்டிச்␢ சிறிது காலம் அவர்கள்␢ துன்பத்திற்கு உள்ளானார்கள்.␢ உமது திருச்சட்டத்தின்␢ கட்டளையை நினைவூட்ட␢ மீட்பின் அடையாளம்␢ ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.⁾
7⁽அப்போது␢ அதை நோக்கித் திரும்பியோர்␢ தாங்கள் பார்த்த பொருளால் அன்று,␢ அனைவருக்கும் மீட்பரான␢ உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.⁾
8⁽இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும்␢ விடுவிப்பவர் நீரே என்று␢ எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.⁾
9⁽ஏனெனில் அவர்கள்␢ வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும்␢ கடியுண்டு மாண்டார்கள்.␢ அவர்கள் உயிரைக் காப்பதற்கு␢ மருந்து எதுவும் காணப்படவில்லை.␢ அவர்கள் இத்தகையவற்றால்␢ தண்டிக்கப்படத் தக்கவர்கள்.⁾
10⁽ஆனால் நச்சுப் பாம்புகளின்␢ பற்களால்கூட உம் மக்களை␢ வீழ்த்த முடியவில்லை.␢ உமது இரக்கம் அவர்களுக்குத்␢ துணைநின்று நலம் அளித்தது.⁾
11⁽உம் சொற்களை␢ அவர்கள் நினைவுகூரும் பொருட்டு␢ அவர்கள் கடிபட்டார்கள்;␢ ஆனால் உடனே␢ நலம் அடைந்தார்கள்.␢ அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு␢ உள்ளாகி, உம் பரிவை␢ உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது.⁾
12⁽பச்சிலையோ களிம்போ␢ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை;␢ ஆனால், ஆண்டவரே,␢ உமது சொல்லே எல்லா மனிதர்க்கும்␢ நலம் அளிக்கிறது.⁾
13⁽வாழ்வின்மேலும் சாவின்மேலும்␢ உமக்கு அதிகாரம் உண்டு.␢ மனிதர்களைப் பாதாளத்தின்␢ வாயில்வரை கொண்டு செல்கிறீர்;␢ மீண்டும் அங்கிருந்து␢ கொண்டு வருகிறீர்.⁾
14⁽மனிதர் தம் தீய பண்பினால்␢ ஒருவரைக் கொன்று விடுகின்றனர்.␢ ஆனால் பிரிந்த உயிரை␢ அவர்களால்␢ திருப்பிக் கொணர முடியாது.␢ சிறைப்பட்ட ஆன்மாக்களை␢ அவர்களால் விடுவிக்கவும் முடியாது.⁾
15⁽ஒருவரும் உமது கையினின்று␢ தப்பமுடியாது.⁾
16⁽உம்மை அறிய மறுத்துவிட்ட␢ இறைப்பற்றில்லாதவர்கள்␢ உமது கைவன்மையால்␢ வதைக்கப்பட்டார்கள்;␢ பேய் மழையாலும் கல் மழையாலும்␢ கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு,␢ தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.⁾
17⁽எல்லாவற்றையும்விட␢ நம்பமுடியாதது எது என்றால்,␢ அனைத்தையும் அவிக்கக்கூடிய␢ தண்ணீரில் அந்த நெருப்பு␢ இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு␢ எரிந்ததுதான்!␢ ஏனெனில் அனைத்துலகும்␢ நீதிமான்களுக்காகப் போராடுகிறது.⁾
18⁽கடவுளின் தண்டனைத் தீர்ப்பு␢ தங்களைப் பின்தொடர்கிறது என்பதை␢ இறைப்பற்றில்லாதவர்கள்␢ கண்டுணருமாறும்,␢ அவர்களுக்கு எதிராய்␢ அனுப்பப்பட்ட உயிரினங்கள்␢ எரிந்து விடாதவாறும்,␢ நெருப்பின் அனல் சில வேளைகளில்␢ மட்டுப்படுத்தப்பட்டது.⁾
19⁽மற்றும் சில வேளைகளில்␢ நீதியற்ற நாட்டின் விளைச்சலை␢ அழிக்கவே␢ தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு␢ முன்னைவிட மிகக் கடுமையாக␢ எரிந்தது.⁾
20⁽இவற்றுக்கு மாறாக␢ உம் மக்களை வானதூதரின்␢ உணவால் ஊட்டி வளர்த்தீர்;␢ எல்லா இனிமையும்␢ பல்சுவையும் கொண்ட உணவை,␢ அவர்களது உழைப்பு இல்லாமலே␢ படைக்கப்பட்ட உணவை␢ வானத்திலிருந்து␢ அவர்களுக்கு அளித்தீர்.⁾
21⁽நீர் அளித்த உணவூட்டம்␢ உம் பிள்ளைகள்பால்␢ நீர் கொண்டிருந்த␢ இனிய உறவைக் காட்டியது;␢ ஏனெனில் அந்த உணவு␢ உண்போரின் சுவையுணர்விற்கு␢ ஏற்றவாறு மாறி,␢ அவரவர் விரும்பிய சுவை தந்தது.⁾
22⁽கல்மழையில் கனன்றெரிந்து,␢ கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே␢ பகைவர்களுடைய விளைச்சலை␢ அழித்தது என்று␢ அவர்கள் அறிந்துகொள்ளுமாறு,␢ பனியும் பனிக்கட்டியும்␢ உருகிடாமல்␢ நெருப்பின் அனலைத் தாங்கின.⁾
23⁽ஆனால் அதே நெருப்பு,␢ நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி␢ தனது இயல்பான ஆற்றலை␢ மீண்டும் மறந்துவிட்டது.⁾
24⁽படைத்தவரான உமக்கு␢ ஊழியம் புரிகின்ற படைப்பு␢ நெறிகெட்டோரைத் தண்டிக்க␢ முனைந்து நிற்கிறது;␢ உம்மை நம்பினோரின்␢ நலனை முன்னிட்டு அது␢ பரிவோடு தணிந்து போகிறது.⁾
25⁽எனவே அந்நேரத்திலேயே␢ படைப்பு எல்லா வகையிலும்␢ தன்னை மாற்றியமைத்துக்␢ கொண்டது;␢ தேவைப்பட்டவர்களின்␢ விருப்பத்திற்கு ஏற்ப,␢ எல்லாரையும் பேணிக் காக்கும்␢ உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.⁾
26⁽ஆண்டவரே,␢ மனிதரைப் பேணிக்காப்பது␢ நிலத்தின் விளைச்சல் அல்ல,␢ மாறாக, உமது சொல்லே␢ உம்மை நம்பினோரைக்␢ காப்பாற்றுகிறது என␢ நீர் அன்புகூரும் உம் மக்கள்␢ இதனால் அறிந்து கொள்வார்கள்.⁾
27⁽நெருப்பினால் எரிபடாதது␢ காலைக் கதிரவனின்␢ ஒளிக் கீற்றாலேயே வெப்பம்␢ அடைந்து எளிதில் உருகிற்று.⁾
28⁽கதிரவன் எழுமுன்பே␢ மக்கள் எழுந்து␢ உமக்கு நன்றி கூறவும்␢ வைகறை வேளையில்␢ உம்மை நோக்கி மன்றாடவும்␢ வேண்டும் என்று␢ இதனால் உணர்த்தப்பட்டது.⁾
29⁽ஏனெனில்␢ நன்றி கொன்றோரின் நம்பிக்கை␢ குளிர்காலத்து உறைபனிபோல்␢ உருகிவிடும்;␢ பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.⁾