1⁽உன் காதல் மனையாளைப்␢ பார்த்துப் பொறாமைப்படாதே;␢ உனக்கே தீங்கு விளைவிக்கும்␢ தீய பழக்கங்களை அவளுக்குச்␢ சொல்லிக்கொடாதே.⁾
2⁽ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே;␢ இல்லையேல், அவள்␢ உன்னையே அடக்கியாள நேரிடும்.⁾
3⁽நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே;␢ அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.⁾
4⁽பாடகியுடன் உனக்குத்␢ தொடர்பு வேண்டாம்.␢ அவளது மயக்கும்␢ வலையில் சிக்கிக்கொள்வாய்.⁾
5⁽கன்னிப்பெண்ணை␢ உற்று நோக்காதே;␢ நீ தடுமாறி அவளால்␢ தண்டனைக்கு ஆளாவாய்.⁾
6⁽விலைமாதரிடம் உன் உள்ளத்தைப்␢ பறிகொடாதே;␢ உன் உரிமைச் சொத்தை␢ நீ இழக்க நேரிடும்.⁾
7⁽நகரின் தெருக்களில்␢ அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே;␢ ஆள்நடமாட்டமற்ற இடங்களில்␢ சுற்றித்திரியாதே.⁾
8⁽அழகான பெண்ணிடமிருந்து␢ உன் கண்களைத் திருப்பிக்கொள்;␢ பிறன் மனைவியின் அழகை␢ உற்றுநோக்காதே.␢ பெண்களின் அழகால்␢ பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்;␢ இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.⁾
9⁽அடுத்தவருடைய மனைவியுடன்␢ அமர்ந்து விருந்துண்ணாதே;␢ அவளுடன் மது அருந்திக் களிக்காதே;␢ உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்;␢ முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.⁾
10⁽உன் பழைய நண்பர்களைக்␢ கைவிடாதே;␢ புதிய நண்பர்கள் அவர்களுக்கு␢ இணையாகமாட்டார்கள்;␢ புதிய நண்பர்கள் புதிய மதுவைப்␢ போன்றவர்கள்.␢ நாள் ஆக ஆகத்தான்␢ அதை நீ சுவைத்துக் களிப்பாய்.⁾
11⁽பாவிகளின் பெருமை கண்டு␢ பொறாமை கொள்ளாதே;␢ அவர்களுக்கு வரவிருக்கும்␢ கேடு உனக்குத் தெரியாது.⁾
12⁽இறைப்பற்றில்லாதவர்களுக்குப்␢ பிடித்தமானவற்றில் இன்பம்␢ கொள்ளாதே;␢ அவர்கள் தங்கள்␢ வாழ்நாளிலேயே தண்டனை␢ பெறுவார்கள் என்பதை␢ நினைவில் இருத்து.⁾
13⁽கொலை செய்ய அதிகாரம்␢ கொண்டவர்களை விட்டுத்␢ தொலைவில் இரு;␢ அப்பொழுது சாவுபற்றிய␢ அச்சத்தால் நீ␢ அலைக்கழிக்கப்படமாட்டாய்;␢ அவர்களிடம் நீ சென்றால்␢ தவறு ஏதும் செய்யாதே;␢ செய்தால் உன் உயிரை␢ அவர்கள் வாங்கிவிடுவார்கள்.␢ கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய்␢ என்றும் நகரின் கோட்டை␢ கொத்தளங்களூடே செல்கிறாய்␢ என்றும் அறிந்துகொள்.⁾
14⁽அடுத்திருப்பவரை அறிய␢ முடிந்தவரை முயற்சி செய்;␢ ஞானிகளைக் கலந்து␢ ஆலோசனை செய்.⁾
15⁽அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு␢ உரையாடு;␢ உன் பேச்செல்லாம் உன்னத␢ இறைவனின் திருச்சட்டம்␢ பற்றி அமையட்டும்.⁾
16⁽நீதிமான்கள் உன்னுடன்␢ விருந்தாடட்டும்;␢ ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சமே உனது␢ பெருமையாக இருக்கட்டும்.⁾
17⁽கைவினைஞரின் திறமையைக்␢ கொண்டே பொருள்கள்␢ மதிப்புப் பெறுகின்றன;␢ மக்கள் தலைவர் தம்␢ பேச்சைக் கொண்டே␢ ஞானியாய் மதிக்கப்படுகிறார்.⁾
18⁽வாயாடியைக் கண்டு அவர்களின்␢ நகரத்தார் அஞ்சுவர்;␢ உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.⁾