1⁽உன் தேவைக்கு ஏற்ப␢ மருத்துவர்களுக்கு␢ உரிய மதிப்பு வழங்கு;␢ ஆண்டவரே␢ அவர்களைப் படைத்தார்;⁾
2⁽உன்னத இறைவனே␢ நலம் அருள்கிறார்;␢ மன்னர் அவர்களுக்குப்␢ பரிசு வழங்குகிறார்.⁾
3⁽மருத்துவரின் அறிவாற்றல்␢ அவர்களைத் தலை நிமிர்ந்து␢ நடக்கச் செய்கிறது;␢ பெரியோர்கள் முன்னிலையில்␢ அவர்கள் வியந்து␢ பாராட்டப் பெறுவார்கள்.⁾
4⁽ஆண்டவர் நிலத்திலிருந்து␢ மருந்துவகைகளைப் படைத்தார்;␢ அறிவுத்திறன் கொண்டோர்␢ அவற்றைப் புறக்கணிப்பதில்லை.⁾
5⁽மரத்துண்டினால் தண்ணீர்␢ இனிமை பெறவில்லையா?␢ இவ்வாறு ஆண்டவருடைய␢ ஆற்றல் வெளிப்படவில்லையா?⁾
6⁽அவரே மனிதருக்கு␢ அறிவாற்றலைக் கொடுத்தார்.␢ இதனால் தம் வியத்தகு␢ செயல்களில் மாட்சி பெற்றார்.⁾
7⁽இவற்றைக் கொண்டு␢ மருத்துவர் நலம் அளிக்கிறார்;␢ வலியை நீக்குகிறார்.␢ மருந்து செய்வோர் இவற்றால்␢ கலவை செய்கின்றனர்.⁾
8⁽இவ்வாறு ஆண்டவரின்␢ வேலை முடிவு பெறாது;␢ அவரிடமிருந்தே உடல்நலம்␢ உலகெல்லாம் நிலவுகிறது.⁾
9⁽குழந்தாய்,␢ நீ நோயுற்றிருக்கும்போது␢ கவலையின்றி இராதே;␢ ஆண்டவரிடம் மன்றாடு.␢ அவர் உனக்கு நலம் அருள்வார்.⁾
10⁽குற்றங்களை அகற்று;␢ நேர்மையானவற்றைச் செய்;␢ எல்லாப் பாவங்களினின்றும்␢ உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்து.⁾
11⁽நறுமணப் பலியையும்,␢ நினைவாகச் செலுத்தப்படும்␢ மாவுப் படையலையும்␢ ஒப்புக்கொடு;␢ உன்னால் முடியும் அளவுக்குப்␢ பலியின்மீது எண்ணெய் ஊற்று.⁾
12⁽மருத்துவருக்கும் அவருக்குரிய␢ இடத்தைக் கொடு;␢ ஏனெனில், ஆண்டவரே␢ அவரைப் படைத்தார்.␢ அவர் உன்னைவிட்டு␢ விலகாதிருக்கட்டும்;␢ ஏனெனில், அவர் உனக்குத் தேவை.⁾
13⁽நலம் பெறுதல் சில வேளைகளில்␢ மருத்துவர்கள் கையில் உள்ளது␢ எனக் கூறக்கூடிய நேரமும் உண்டு.⁾
14⁽ஏனெனில், வலி நீக்கி,␢ நலமாக்கி, உயிரைக் காப்பாற்றும்␢ அருளைத் தரவேண்டும் என␢ அவர்களும் ஆண்டவரை␢ மன்றாடுவார்கள்.⁾
15⁽தம்மைப் படைத்தவர் முன்னிலையில்␢ பாவம் செய்வோர்␢ மருத்துவரின் கைகளில் விழட்டும்.⁾
16⁽குழந்தாய், இறந்தவர்களுக்காகக்␢ கண்ணீர் சிந்து;␢ பெருந் துன்பங்களில் உழல்வோர்␢ போலப் புலம்பத் தொடங்கு.␢ இறந்தோருடைய உடலைத்␢ தகுந்த முறையில் மூடிவை;␢ அவர்களுடைய அடக்கத்திற்குச்␢ செல்லத் தவறாதே.⁾
17⁽மனம் வெதும்பி அழு;␢ உணர்வு பொங்கப் புலம்பு;␢ இழிவுப் பேச்சைத்␢ தவிர்க்கும்பொருட்டு␢ இறந்தவருடைய தகுதிக்கு ஏற்ப␢ ஒரு நாளோ இரு நாளோ␢ துயரம் கொண்டாடு.␢ பின்பு துன்பத்தில் ஆறுதல் பெறு.⁾
18⁽துன்பம் சாவை வருவிக்கிறது;␢ துயர்மிக்க உள்ளம்␢ வலிமையைக் குலைக்கிறது.⁾
19⁽பேரிடர் நிகழும் போது␢ துன்பம் நீடிக்கிறது;␢ ஏழையின் வாழ்க்கை␢ உள்ளத்தை வருத்துகிறது.⁾
20⁽உன் உள்ளத்தைத்␢ துன்பத்திற்கு ஒப்புவித்து விடாதே;␢ அதைத் துரத்திவிடு;␢ முடிவை நினைத்துக்கொள்.⁾
21⁽மறந்துவிடாதே;␢ இறந்தோர் திரும்பி வருவதில்லை.␢ அவர்களுக்கு நீ நன்மை␢ செய்ய முடியாது.␢ உனக்கு நீயே␢ தீங்கிழைத்துக்கொள்வாய்.⁾
22⁽“என்னுடைய நிலையை␢ நினைவில் கொள்;␢ உன்னுடையதும் இதைப் போன்றதே.␢ நேற்று எனக்கு, இன்று உனக்கு.”⁾
23⁽இறந்தோரின் அடக்கத்தோடு␢ அவர்களுடைய நினைவும்␢ அடக்கம் பெறட்டும்;␢ அவர்களுடைய ஆவி␢ பிரிந்தபின் அவர்களுக்காக␢ ஆறுதல் பெறு.⁾
24⁽ஓய்வு நேரம்␢ மறைநூல் அறிஞரின் ஞானத்தை␢ வளர்க்க வாய்ப்பு அளிக்கிறது.␢ குறைவான செயல்பாடு␢ உள்ளோரே ஞானத்தில் வளர்வர்.⁾
25⁽கலப்பையைப் பிடிக்கிறவர்,␢ தாற்றுக்கோலின் பிடியில்␢ பெருமை கொள்கிறவர்,␢ எருதுகளை ஓட்டி அவற்றின்␢ வேலைகளில் மூழ்கியிருக்கிறவர்,␢ இளங்காளைகளைப் பற்றியே␢ பேசிக் கொண்டிருக்கிறவர்␢ எவ்வாறு ஞானத்தில் வளர்வர்?⁾
26⁽அவர்கள் உழுசால் ஓட்டுவதில்␢ தங்கள் உள்ளத்தைச்␢ செலுத்துகிறார்கள்;␢ இளம் பசுக்களுக்குத் தீனி␢ வைப்பதில் விழிப்பாய் இருக்கிறார்கள்.⁾
27⁽இவர்களைப்போலவே,␢ எல்லாத் தொழிலாளரும்␢ கைவினைஞரும் இரவு பகலாக␢ வேலை செய்கின்றனர்;␢ செதுக்கிய முத்திரைகளை␢ உருவாக்குவோர் வகை வகையான␢ மாதிரிகளை உருவாக்குவதில்␢ ஊக்கம் கொண்டிருக்கின்றனர்;␢ உயிரோட்டமுள்ள உருவங்களைப்␢ படைப்பதில் மனத்தைச் செலுத்துவோர்␢ தங்கள் வேலையை முடிப்பதில்␢ விழிப்பாய் இருக்கின்றனர்.⁾
28⁽இவர்களைப்போலவே,␢ பட்டறை அருகில் அமர்ந்திருக்கும்␢ கொல்லர்கள் இரும்பு வேலையில்␢ குறியாய் இருக்கிறார்கள்.␢ நெருப்பின் வெப்பம் அவர்களது␢ சதையைச் சுடுகின்றது.␢ உலையின் வெப்பத்தில்␢ அவர்கள் போராடுகிறார்கள்.␢ சம்மட்டியின் ஒலி அவர்கள்␢ காதைச் செவிடாக்குகிறது.␢ செய்யும் கலத்தின் மாதிரிமீது␢ அவர்களின் கண்கள்␢ பதிந்திருக்கின்றன.␢ வேலைகளை முடிப்பதில்␢ அவர்கள் மனத்தைச்␢ செலுத்துகிறார்கள்;␢ அவற்றை அழகு செய்வதில்␢ விழிப்பாய் இருக்கிறார்கள்.⁾
29⁽இவர்களைப்போலவே,␢ வேலையில் அமர்ந்திருக்கும்␢ குயவர்கள் தங்கள்␢ கால்களால் சக்கரத்தைச்␢ சுழற்றுகிறார்கள்;␢ எப்போதும் தங்கள்␢ வேலையின் மீது ஆழ்ந்த␢ கவலை கொண்டிருக்கிறார்கள்.␢ அவர்களின் முழு வேலையும்␢ அவர்கள் செய்த␢ கலன்களின் எண்ணிக்கையைப்␢ பொறுத்துள்ளது.⁾
30⁽அவர்கள் தங்கள் கையால்␢ களிமண்ணைப் பிசைகிறார்கள்;␢ தங்கள் கால்களால் அதனைப்␢ பதப்படுத்துகிறார்கள்;␢ கலன்களை மெருகிட்டு␢ முடிப்பதில் தங்கள்␢ உள்ளத்தைச் செலுத்துகிறார்கள்;␢ சூளையைத் தூய்மைப்படுத்துவதில்␢ விழிப்பாய் இருக்கிறார்கள்.⁾
31⁽இவர்கள் எல்லாரும் தங்கள்␢ கைகளையே நம்பியுள்ளனர்;␢ ஒவ்வொருவரும் தம் தொழிலில்␢ திறமை கொண்டுள்ளனர்.⁾
32⁽இவர்களின்றி நகர்கள்␢ குடியிருப்பாரற்றுக் கிடக்கும்;␢ அவற்றில் எவரும் தங்கி␢ வாழ்வதில்லை; உலாவுவதுமில்லை.⁾
33⁽ஆயினும் இவர்கள்␢ மக்கள் மன்றத்தில்␢ தேடப்படுவதில்லை;␢ மக்கள் சபையில் முதலிடம்␢ பெறுவதில்லை.␢ நடுவரின் இருக்கையில்␢ அமரமாட்டார்கள்;␢ நீதி மன்றத்தின் தீர்ப்புகளைப்␢ புரிந்துகொள்ளமாட்டார்கள்.⁾
34⁽நற்பயிற்சியையோ தீர்ப்பையோ␢ அவர்களால் விளக்கிக்கூற␢ இயலாது; உவமைகளைக்␢ கொண்டு பேசுவதைக்␢ காண முடியாது. ஆனால்,␢ படைப்பின் அமைப்பைப்␢ பேணிக் காப்பாற்றுகிறார்கள்;␢ அவர்களது வேண்டுதல் அவர்களது␢ தொழிலைப்பற்றியே இருக்கும்.⁾