1⁽எல்லா நண்பர்களும்,␢ “நாங்களும் உம்␢ நண்பர்கள்” என்பார்கள்;␢ சிலர் பெயரளவில் மட்டுமே␢ நண்பர்கள்.⁾
2⁽தோழரோ நண்பரோ␢ பகைவராய் மாறுவது␢ சாவை வருவிக்கும்␢ வருத்தத்திற்கு உரியதன்றோ?⁾
3⁽ஓ! தீய நாட்டமே,␢ நிலத்தை வஞ்சனையால்␢ நிரப்ப எங்கிருந்து நீ உருவானாய்?⁾
4⁽தோழர்கள் சிலர் தங்கள்␢ நண்பர்களின் உவகையில்␢ மகிழ்வார்கள்; துன்பக் காலத்தில்␢ அவர்களை எதிர்ப்பார்கள்.⁾
5⁽வேறு சில தோழர்கள்␢ வயிற்றுப் பிழைப்புக்காக␢ நண்பர்களுக்கு உதவுவார்கள்;␢ இருப்பினும் போர்க் காலத்தில்␢ எதிரியிடமிருந்து அவர்களைக்␢ காப்பார்கள்.⁾
6⁽உன் உள்ளத்தில்␢ உன் நண்பர்களை மறவாதே;␢ உன்செல்வத்தில்␢ அவர்களை நினையாமலிராதே.⁾
7⁽எல்லா அறிவுரையாளரும்␢ தங்கள் அறிவுரையைப்␢ பாராட்டுவர்; சிலர்␢ தன்னலத்துக்காகவே␢ அறிவுரை கூறுவர்.⁾
8⁽அறிவுரையாளரைப்பற்றி␢ எச்சரிக்கையாய் இரு;␢ முதலில் அவர்களது தேவை␢ என்ன எனக் கண்டுபிடி.␢ ஏனெனில் அவர்கள்␢ தன்னலத்துக்காகவே␢ அறிவுரை கூறுவார்கள்.␢ இல்லையேல்,␢ உனக்கு எதிராகத் தங்கள்␢ செல்வாக்கைப் பயன்படுத்தலாம்.⁾
9⁽அவர்கள் உன்னிடம்,␢ ‘உன் வழி நல்லது’␢ எனச் சொல்வார்கள்.␢ பின்பு, உனக்கு␢ என்ன நடக்கிறது எனப் பார்க்க␢ உனக்கு எதிரே நிற்பார்கள்.⁾
10⁽உன்னைச் சந்தேகக்␢ கண்ணோடு பார்க்கிறவரிடம்␢ அறிவுரை கேளாதே;␢ உன்மேல் பொறாமை␢ கொள்வோரிடமிருந்து␢ உன் எண்ணங்களை␢ மறைத்துக்கொள்.⁾
11⁽பெண்ணிடம் அவளுடைய␢ எதிரியைப்பற்றியோ,␢ கோழையிடம் போரைப்பற்றியோ,␢ வணிகரிடம் விலைகளைப் பற்றியோ,␢ வாங்குபவரிடம் விற்பனையைப்பற்றியோ,␢ பொறாமை கொள்பவரிடம்␢ நன்றியறிதலைப்பற்றியோ,␢ கொடியவரிடம் இரக்கத்தைப் பற்றியோ,␢ சோம்பேறியிடம் வேலையைப்பற்றியோ,␢ நாள் கூலியாளிடம் வேலையை␢ முடித்தலைப்பற்றியோ,␢ சோம்பேறி அடிமையிடம்␢ பல வேலைகளைப்பற்றியோ,␢ அவர்கள் கொடுக்கும்␢ எந்த அறிவுரையையும்␢ பொருட்படுத்தாதே.⁾
12⁽இறைப்பற்றுள்ளவர்களோடு,␢ உனக்குத் தெரிந்தவரை␢ கட்டளைகளைக் கடைப்பிடித்தவர்களோடு,␢ ஒத்த கருத்து உடைவர்களோடு,␢ நீ தவறினால் உன்னுடன்␢ சேர்ந்து வருந்துபவர்களோடு,␢ எவ்பொழுதும் இணைந்திரு.⁾
13⁽உன் உள்ளத்தின்␢ அறிவுரையில் உறுதியாய் நில்;␢ அதைவிட நம்பத்தக்கது␢ உனக்கு வேறெதுவுமில்லை.⁾
14⁽காவல்மாடத்தின்மேலே␢ அமர்ந்திருக்கும்␢ ஏழு காவலர்களைவிட␢ மனித உள்ளம் சில வேளைகளில்␢ நன்கு அறிவுறுத்துகிறது.⁾
15⁽இவை எல்லாவற்றுக்கும்மேலாக,␢ உன்னத இறைவனிடம் மன்றாடு.␢ அப்பொழுது அவர் உன்னை␢ உண்மையின் வழியில் நடத்துவார்.⁾
16⁽எண்ணமே செயலின் தொடக்கம்;␢ திட்டமிடல் எல்லாச்␢ செயலாக்கத்திற்கும் முன்செல்கிறது.⁾
17⁽மனமாற்றத்தின் அடையாளம்␢ நான்கு வகைகளில் வெளிப்படும்;⁾
18⁽அவை நன்மை தீமை, வாழ்வு சாவு;␢ இவற்றை இடைவிடாது ஆண்டு␢ நடத்துவது நாவே.⁾
19⁽பலருக்கு நற்பயிற்சி அளிப்பதில்␢ சிலர் திறமையுள்ளோராய்␢ இருக்கின்றனர்; தமக்கோ␢ பயனற்றவராய் இருக்கின்றனர்;⁾
20⁽நாவன்மை படைத்த சிலர்␢ வெறுக்கப்படுகின்றனர்;␢ அவர்களுக்கு எவ்வகை உணவும்␢ இல்லாமற் போகும்.⁾
21⁽ஏனெனில் பேசும் வரம்␢ அவர்களுக்கு ஆண்டவரால்␢ கொடுக்கப்படவில்லை;␢ அவர்களிடம் எவ்வகை␢ ஞானமும் இல்லை.⁾
22⁽சிலர் தங்களுக்கே ஞானியராய்␢ இருக்கின்றனர்;␢ அவர்களுடைய அறிவுக்கூர்மையின்␢ பயன்கள் அவர்களது␢ பேச்சில் வெளிப்படும்.⁾
23⁽ஞானி தம் மக்களுக்கு␢ நற்பயிற்சி அளிக்கிறார்;␢ அவருடைய அறிவுக்கூர்மையின்␢ பயன்கள் நம்பத்தக்கவை.⁾
24⁽ஞானி புகழால் நிரப்பப்படுவார்;␢ அவரைக் காண்போர்␢ அனைவரும் அவரைப் பேறுபெற்றவர்␢ என அழைப்பர்.⁾
25⁽மனித வாழ்க்கை, நாள்களின்␢ எண்ணிக்கையில் அடங்கும்;␢ இஸ்ரயேலின் நாள்களோ␢ எண்ணிக்கையில் அடங்கா.⁾
26⁽ஞானி தம் மக்கள் நடுவே␢ நன்மதிப்பை␢ உரிமையாக்கிக் கொள்வார்;␢ அவரது பெயர் நீடூழி வாழும்.⁾
27⁽குழந்தாய், உன் வாழ்நாளில்␢ உன்னையே சோதித்துப்பார்;␢ உனக்கு எது தீயது எனக் கவனி;␢ அதற்கு இடம் கொடாதே.⁾
28⁽எல்லாமே எல்லாருக்கும்␢ நன்மை பயப்பதில்லை;␢ எல்லாரும் எல்லாவற்றிலும்␢ இன்பம் காண்பதில்லை;⁾
29⁽எவ்வகை இன்பத்திலும்␢ எல்லை மீறிச் செல்லாதே;␢ நீ உண்பவற்றின் மீது மிகுந்த␢ ஆவல் கொள்ளாதே.⁾
30⁽மிகுதியாக உண்பதால்␢ நோய் உண்டாகிறது;␢ பேருண்டி குமட்டலைக்␢ கொடுக்கிறது.⁾
31⁽பேருண்டியால் பலர் மாண்டனர்;␢ அளவோடு உண்போர்␢ நெடுநாள் வாழ்வர்.⁾